ஆளுமைக் கோளாறு (Personality Disorder)

ஆளுமைக் கோளாறு (Personality Disorder)
“ஆளுமை”
என்பது ஒரு நபரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை முறை என இலகுவாக வரைவிலக்கணப்படுத்தலாம்.
Guilford என்பவர் ஆளுமை என்பது ஒருவனின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று வரையறுக்கின்றார்.
ஒரு தனிநபரின் ஆளுமையானது அனுபவங்கள், சூழல் மற்றும் பரம்பரைப் பண்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் ஆளுமை பொதுவாக காலப்போக்கில் அப்படியே இருக்கும்.
ஆளுமைக் கோளாறாக வகைப்படுத்தப்பட, ஒருவரின் சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை என்பன கலாச்சாரத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகி, துன்பம் அல்லது சிக்கல்களைச் செயல்படுத்தி, காலப்போக்கில் அவை நீடிக்கும்.
அனுபவம் மற்றும் நடத்தை முறை பொதுவாக இளமைப் பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது. சிகிச்சை இல்லாமல், ஆளுமை கோளாறுகள் நீண்ட காலம் நீடிக்கும். அந்த வகையில் 10 வகையான ஆளுமை கோளாறுகள் காணப்படுகின்றன.
ஆளுமைக் கோளாறுகளின் வகைகள்( Types of personality disorders)
1. சந்தேக ஆளுமைக் கோளாறு (Paranoid personality disorder) : இது அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்திற்குரியவையாகும். காரணமின்றி மற்றவர்களின் மீது சந்தேகம் கொள்ளல், மற்றவர்கள் தங்களை இழிவு படுத்தவோ அச்சுறுத்தவோ முயற்சிக்கிறார்கள் என்று நம்புபவர்களாக காணப்படுவார்கள்.
2. மனப் பிளவு ஆளுமைக் கோளாறு ( Schizoid personality disorder) : மனப்பிளவு ஆளுமைக் கோளாறு உள்ளவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது குறைந்த அளவிலான உணர்ச்சிகளையே கொண்டுள்ளனர். குறிப்பாக கூறின் தனிப்பட்ட உறவுகளிலிருந்து விலகிக் காணப்படுதல்.
3. நாடகப் பாங்கான ஆளுமைக் கோளாறு (Histrionic Personality disorder) : இவர்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற அதித விருப்பத்தைக் கொண்டு காணப்படுவர். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு வியத்தகு அல்லது பொருத்தமற்ற நடவடிக்கைகளைக் காட்டலாம்.
4. சார்ந்திருக்கும் ஆளுமைக் கோளாறு ( Dependent personality disorder) : பெரும்பாலும் மற்ற நபர்களுடன் மிகவும் நெருக்கமாகி, அந்த நபரை விரும்ப வைக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் செயலற்ற மற்றும் ஒட்டிக்கொண்ட நடத்தையைக் காட்ட முனைகிறார்கள். இவர்களிடம் பிரிந்து விடுவோமோ என்ற பயம் காணப்படும்.
5. சமூகவிரோத ஆளுமைக் கோளாறு (Antisocial personality disorder) : முரட்டுத்தனமாகவும்,வன்முறைத்தனமாகவும், அல்லது மற்றவர்களது உரிமைகளை மீறும் அளவிற்கு மற்றவர்களைப் பற்றிக் கவனயீனமாகவும் இருத்தல்.
6. தவிர்ப்பு ஆளுமைக் கோளாறு(Avoidant personality disorder) : விமர்சனம் அல்லது நிராகரிப்பு ஆகியவற்றினால் அதி- உணர்ச்சிவசப்படல்,மற்றும் அளவு கடந்த கூச்சம்.
7. விளிம்புநிலை ஆளுமைக் கோளாறு (Borderline personality disorder) : திடீர் உணர்ச்சி வசப்படலுக்கு ஆளாகி செயல்படல், பெரும் ஆபத்தான காரியங்களை மேற்கொள்ளல், கோபச் சீற்றங்கள் அல்லது நிலையற்ற மனைநிலைகளைக் கொண்டிருத்தல்.
8. நார்சீஸிஸ்டிக் ஆளுமைக் கோளாறு( Narcissistic personality disorder) : மற்ற அனைவரையும் விட தாம் மிகச் சிறப்பானவர் என்று நம்பிக்கை கொண்டிருத்தல்.
9. பெருவிருப்பக் – கட்டாய ஆளுமை கோளாறு (Obsessive – compulsive personality disorder) : மற்றவர்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்தும் தன்மை, எதிலும் முழுமை நாடும் எண்ணம், விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் ஆகியவற்றில் மூழ்கியிருத்தல், பழைய அல்லது உடைந்துபோன பொருட்களை அப்புறப்படுத்தி வீச இயலாமை.
10. சமூகத் தவிர்ப்பு, உணரா- நிலை ஆளுமைக் கோளாறு (Schizo typal personality disorder): மற்றவர்களைப் பற்றி உண்மையில் கவனயீனமாகயிருத்தல், மற்றும் மாயாஜால சிந்தனை போன்ற வழமைக்கு மாறான எண்ணங்களைக் கொண்டிருத்தல். அதாவது உங்களுடைய எண்ணங்களின் மூலமாக ஆட்களையும்,நிகழ்வுகளையும் உங்களால் கட்டுப்படுத்த இயலும் என்ற நம்பிக்கை கொண்டிருத்தல்.
*அறிகுறிகள் ( Symptoms)
ஆளுமைக் கோளாறுகளின் அறிகுறிகள் என்பன ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சமயத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆளுமைப் பண்புகள் ஆகும். இது எப்படி வித்தியாசப்படுகிறது என்றால், அவர்களுடைய நடத்தை முறை தீவிரமானதாக இருக்கும், மற்றும் அவர்களால் அதை சரிப்படுத்திக்கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ இயலாமல் இருக்கும்.
18 வயது ஆகும் வரைக்கும் ஆளுமைக் கோளாறுகளைக் கண்டறிவது இயலாது,ஏனெனில், அந்த வயது ஆகும் வரை நமது ஆளுமையின் வளர்ச்சியானது தொடர்ந்து கொண்டிருக்கும்.
*ஆளுமைக் கோளாறு உள்ள ஒருவருக்கு காணப்படக்கூடிய அறிகுறிகள்
1. அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்.
2. மற்றவர்களிடம் மீதான அதிக அளவு சார்பு.
3. தீவிர தற்பெருமை.
4. தடுமாற்றங்கள் நிறைந்த உறவுமுறைகள்
5. திடீர் கோப வெளிப்பாடுகள்.
6. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம்.
7. மற்றவர்களை நம்பாமை மற்றும் சந்தேகித்தல்.
8. சுய தீங்கிழைப்பு அல்லது தற்கொலை முயற்சி போன்ற இன்னொரன்ன விடயங்களைக் குறிப்பிடலாம்.
காரணங்கள் (Causes)
ஒருவருக்கு ஆளுமைக் கோளாறு ஒன்று ஏற்படும் சாத்தியத்தினை சில காரணங்கள் அதிகப்படுத்த கூடும். அவைகள் வருமாறு.
1. ஆளுமைக் கோளாறுகள் அல்லது மனநலம் குறித்த வேறு கரிசனங்கள் கொண்ட குடும்ப வரலாறு.
2. குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு.
3. குழந்தைப் பருவத்தில் இருந்த நிலையற்ற அல்லது குழப்பமான குடும்ப வாழ்க்கை.
4. குழந்தைப் பருவத்தில் நடத்தைக் கோளாறு இருந்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருத்தல்.
5. மரணம் அல்லது அதிர்ச்சியூட்டும் விவகாரத்தின் காரணமாக குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்திருத்தல்.
ஆளுமை கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அவர்கள் விருப்பப்பட்டு வரவழைத்துக் கொள்வதில்லை, அத்துடன் இந்த கோளாறு உருவாவதற்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.
M.A. Asmeer (SLTS),M.Ed
References :
1. Psychiatry.org (https:www.Psychiatry.org)
2. Embrace Multicultural Mental Health. org (https:www.embracementalhealth.org)