தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்துணர்வுக்குமான கல்வி

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்துணர்வுக்குமான கல்வி
Education for National Integration and International understanding
S.Logarajah
Lecturer,
Batticaloa National College of Education
மனிதர்களாகிய நாம் இப்பூவுலகில் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ சமாதானம் என்பது இன்றியமையாத ஓர் அடித்தளமாக அமைந்து காணப்படுகின்றது. எப்போது ஒரு நாட்டில் போர்கள், பூசல்கள் இன்றி சமாதானம் நிலவுகிறதோ, அப்பொழுதுதான் அந்நாட்டின் பொருளாதாரம், பண்பாட்டு என்பவற்றில் வளர்ச்சி மிகுந்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து நாடு முன்னேற்றப் பாதையில் வெகு துரிதமாக இயங்குவதைக் காணலாம். நாட்டின் சமாதானம் என்பது உலக சமாதானத்திற்கு முதல் படியாகும்.
உலக சமாதானத்திற்கு ஒரு கருவியாக இயங்க வேண்டிய கல்வி நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுத்து, நாட்டின் அபிவிருத்திற்கு உதவி படிப்படியாக நாடுகளிடையே நல்லுணர்வை வளர்க்கும் வலுவான கருவியாக அமைதல் வேண்டும்.
“பூசல்கள் மக்களது மனங்களில் தோன்றுகின்றன. எனவே சமாதானத்திற்கான அரண்களும் மக்களது மனங்களிலேயே அமைக்கப்பட வேண்டும்” என்று யுனெஸ்கோ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பண்பட்ட மனங்களை உருவாக்கும் கருவியாக கல்வி அமைதல் வேண்டும்.
தேசிய கல்வி ஆணைக்குழு 2003 ஆண்டு வெளியிட்ட தேசிய கல்வி இலக்குத் தொகுதி ஊடாகவும் இவையே எதிர்பார்க்கப்படுகின்றன.
இலக்கு 1
“மனித கௌரவத்தை கண்ணியப்படுத்துதல் எனும் எண்ணக்கருவுக்குள் தேசிய பிணைப்பு, தேசிய முழுமை, தேசிய ஒற்றுமை, இணக்கம், சமாதானம் என்பவற்றை மேம்படுத்துதல் மூலம் இலங்கைப் பன்மைச் சமூகத்தின் சலாசார வேறுபாடுகளை அங்கிகரிப்பதனூடாக தேசத்தைக் கட்டியெழுப்புதலும், இலங்கையர் எனும் அடையாளத்தை ஏற்படுத்துதலும்.
இலக்கு 2
மாற்றமுறும் உலகத்தின் சவால்களுக்குத் தக்கவாறு முகங்கொடுத்தலோடு, தேசிய பாரம்பரியத்தின் அதி சிறந்த அம்சங்களை அங்கிகரித்தலும், பேணுதலும்.
இலக்கு 3
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், கடமைகள், கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள ஆழ்ந்த இடையறாத அக்கறை உணர்வு, என்பவற்றை மேம்படுத்துவதும், சமூக நீதியும் சனநாயக வாழ்க்கை முறை நியமங்களையும் உள்ளடக்கிய சுற்றாடலை உருவாக்குதலும், மேம்படுத்துதலும்.
இலக்கு 4
ஒருவரது உள, உடல் நலனையும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்ட நிலை பேறுடைய வாழ்க்கைக் கோலத்தை மேம்படுத்ததல்.
இலக்கு 5
நன்கு ஒன்றிணைக்கப்பட்ட சமநிலை ஆளுமைக்குரிய ஆக்கசிந்தனை> தற்றுணிபு, ஆய்ந்து சிந்தித்தல்> பொறுப்பு, வகை கூறல் மற்றும் உடன்பாடான அம்சங்களை விருத்தி செய்தல்.
இலக்கு 6
தனிநபரதும் தேசத்தினதும் வாழ்க்கைத் தரத்தைப் போஷிக்கக் கூடியதும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக் கூடியதுமான ஆக்கப் பணிகளுக்கான கல்வியூட்டுவதன் மூலம் மனிதவள அபிவிருத்தியினை ஏற்படுத்ததல்.
இலக்கு 7
தனிநபர்களின் மாற்றத்திற்கேற்ப இணங்கி வாழவும், மாற்றத்தை முகாமை செய்யவும், தயார்படுத்தவும், விரைவாக மாறிவரும் உலகில் சிக்கலானதும், எதிர்பாராததுமான நிலைமைகளைச் சமாளிக்கும் தகைமையை விருத்தி செய்தல்.
இலக்கு 8
நீதி, சமத்துவம், பரஸ்பர மரியாதை, என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச சமூகத்தில் கௌரவமானதோர் இடத்தைப் பெறுவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய மனப்பாங்குகளையும் திறனையும் வளர்த்தல்.
இதனடிப்படையில் கல்வியானது மாணவர்களிடையே பரந்த மனப்பாங்கினைத் தோற்றுவித்து பிற நாட்டினர் பற்றிய உண்மை அறிவை அளித்து சமூகப்பிரச்சினைகளில் உணர்ச்சிவசப்படாது நேர் சிந்தனை வழியே (Straight or Logical thinking) உண்மை நிலையை உணர்ந்து செயல்படும் மனப்பக்குவத்தை தோற்றுவிக்க வேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற சிறப்பான மனித நேய உணர்வை உண்மைக் கல்வியானது ஊட்ட வேண்டும்.
நாட்டுப்பற்று (Patriotism)
உலக நாடுகளிடையே நல்லிணைப்பைத் தோற்றுவித்தலின் முதற்கட்டமாக கல்வியானது, மாணவர்களிடையே நாட்டுப்பற்றினைத் தோற்றுவித்தல் வேண்டும். நமது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும்> உறுதுணையாக கல்வி அமைவதோடு, கலைத்திட்டம் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகள் ஆகியவற்றின் துணையோடு ஒவ்வொரு மாணவரையும் நமது நாட்டின் சிறப்பு மிக்க குடிமகனாக வளர்க்க உதவவேண்டும். இதனையே நமது தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகின்றது.
நாட்டுப்பற்றுக்கு அடிப்படையாக அமைவது அரசியலமைப்பு இலட்சியங்களில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவதாகும். நமது நாடு பிரதிநிதித்துவ சனநாயக ஆட்சியை பின்பற்றும் நாடாகும். அதாவது தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் துணைகொண்டு தம்மைத் தாமே ஆட்சி செய்வது இதன் பண்பாகும். சனநாயக ஆட்சியில் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது. அவர்களுக்கு சில அடிப்படை உரிமைகளும், சமூதாயக் கடமைகளும் உள்ளன. இதன் மூலம் சமத்துவம் நிலைநாட்டப்படுகின்றது.
இத்தகைய கருத்துக்களை இளம் வயதிலிருந்தே மாணவர்களது உள்ளத்தில் புகுத்தி இவற்றை செயற்படுத்தும் கல்வி மற்றும் குடியியல் பயிற்சியை பாடசாலைகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும். பாடசாலைகள் ஒவ்வொன்றும் தானே சனநாயகத்தைப் பிரதிபலிக்கின்ற சிறு சமூகமாகச் செயற்படும் போது அவற்றில் பயிலும் மாணவர்களும் இயல்பாகவே சனநாயகப் பண்புகளைத் தம்மில் வளர்த்துக்கொள்வர்.
சமயச்சார்பின்மை (Seculacism)
நமது நாட்டில் பல சமயங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்கின்றனர். எல்லா சமயங்களும் நமது நாட்டின் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியுள்ளன> இன்றும் உதவிக்கொண்டு தான் இருக்கின்றன. எனவே தேசிய ஒருங்கிணைப்பின் ஓர் அங்கமாக மதச்சார்பின்மை அமைந்து விடுகின்றது. “மதச்சார்பின்மை” என்பது மதம் இல்லை என்பதல்ல. நாம் எல்லாக் கோட்பாடுகளையும் மதங்களையும் மதிக்கின்றோம் என்பதே இதன்பொருள். அதற்காக எம்மதமும் சம்மதம் என்பது அதன் பொருளல்ல. அப்படி ஒருவர் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஒரு பௌத்தன் நல்ல பௌத்தனாக, ஒரு இந்து நல்ல இந்துவாக, ஒரு கிறிஸ்தவன் நல்ல கிறிஸ்தவனாக, ஒரு இஸ்லாமியன் நல்ல இஸ்லாமியனாக இருக்க வேண்டும். மத நல்லிணக்கம் என்பது வார்த்தைகளாக அல்லாமல் செயற்பாடுகளில் வெளிக்காட்டப்பட வேண்டும்.
இந்திய தேசபிதாவான காந்தியடிகள் இதுபற்றிக் குறிப்பிடும் போது மற்ற மதக்கோட்பாடுகளையும் என்னுடைய மதக் கோட்பாடுகள் போன்றே மதிக்கின்றேன் என்று கூறினார். அரசின் கொள்கைகள் சமூதாய வளர்ச்சியை அடிப்படையதகக் கொண்டு வகுக்கப்பட வேண்டுமேயொழிய மதச்சார்புடையதாக, ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்க்கும் நோக்கோடு வகுக்கப்படக் கூடாது. அதே நேரம் அரசின் கொள்கைகள் மதத்திற்கு எதிரானவையாகவும் அமைந்துவிடக் கூடாது. தனிமனிதனின் உரிமையைப்பாதிப்பது அரசியலமைப்பின் நோக்கமன்று.
இலங்கையில் மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்படாமை உண்மையில் பிரச்சினைக்குரிய ஓர் விடயமாகவே இருந்து வருகின்றது. குறிப்பிட்ட ஒரு சமயம் அரசியலமைப்பினூடாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு வந்தமையே கடந்த காலங்களில் பல்வேறு முரண்பாடுகளுக்கு வித்திட்டது என்றால் அது மிகையில்லை. எனவே புதிய அரசியலமைப்பினூடாக மதச்சார்பின்மை நிலைநாட்டப்பட வேண்டும்.
ஒரு தனி மனிதனைச் சுதந்திரமான சிந்தனையாளனாகவும், திறந்த மனமுடையவனாகவும், வளரச் செய்வதுதான் கல்வி. மதவெறி என்பது மத சகிப்புத் தன்மையாக மாற வேண்டும். எல்லா மதங்களிலும் அடங்கிய நல்ல கூறுகளை மட்டுமே மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். நன்கு தேர்தெடுக்கப்பட்ட இணைப்பாட விதானச் செயற்பாடுகள் மூலமாக மாணவர்களின் சமயப்பற்றை தூய்மையாக்க முடியும். இன்றை இலங்கையில் மதபோதனையைக் காட்டிலும் இதுவே முக்கியமான> இன்றியமையாத தேவையாக உள்ளது.
மதச் சார்பின்மை என்பது ஐந்து முக்கிய விடயங்களை கல்வியின் ஊடாக வலியுறுத்துகின்றது. அவையாவன
- அன்பு
- சகிப்புத்தன்மை
- உண்மை
- அமைதி
- பிறரை மதிக்கும் பண்பு
மதச்சார்பின்மையின் பயன்களாக நாம் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
- எல்லா மதக் கருத்தக்களைத் தெரிந்து கொள்ளலாம்.
- அவற்றிலுள்ள நல்ல கருத்துக்களைப் பிற்பற்றலாம்.
- சமய ஏற்றத்தாழ்வுகளற்ற சமூதாய அடிப்படையை உருவாக்கலாம்.
- நாட்டுப்பற்றைக் கட்டியெழுப்பலாம்.
- தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கலாம்.
தேசிய ஒருமைப்பாடு (National Integration)
இலங்கை ஓர் சிறய தீவாக இருந்தாலும் அதில் பல இன மக்கள் வாழ்கின்றனர். சிங்களம் தழிழ் ஆகிய மொழிகள் பிரதான மொழிகளாகவும்> ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் உள்ளது. இவை தவிர வேறு மொழிகளைப் பேசுவோரும் சிறிய அளவில் உள்ளனர். மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகம் காணப்படுகின்றது.
இவ்வேறுபாடுகள் இருப்பினும் தேசிய ஒருமைப்பாட்டு எண்ணம் மக்கள் மனங்களில் அமைதியாக வளர வேண்டும். இதற்கான ஒரே வழி கல்விதான். நமது குறுகிய இன> மத> தொழி மற்றும் பிரதேசப் பற்றுக்களைக் களைந்து நாம் ஒரே தேசத்தவர், நாம் இலங்கையர் என்ற ஒற்றுமையோடு பாடுபட்டால்தான் உலக அரங்கில் நமது அரசியல் நிலையையும், நமது பொருளாதார சக்தியையும், உயர்த்திக் கொள்ள முடியும். பொதுவான வாழ்க்கை இலட்சியங்கள், பொதுவான நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருமைப்பாடு (Emotional Integration) தேசிய ஒருமைப் பாட்டிற்கு தேவையான ஓர் அம்சமாகும்.
சர்வதேச புரிந்துணர்வுக்கான கல்வி
(Education for International understanding)
பாடசாலைகளில் சர்வதேச புரிந்துணர்வுக்கான கல்வி இரு விதங்களில் அளிக்கப்படலாம்.
- நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ள நிலை அனைத்திற்கும் பொதுவான பூகோளப் பண்பாடு முதலிய கருத்துக்களைக் கற்பித்தல், இது சர்வதேச புரிந்துணர்வுக்கும் உலக அமைதிக்கும் வழிவகுக்கும்.
- பிற நாடுகள் மீது விருப்பமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுதல் இதற்கு எல்லா நாட்டு மக்களைப் பற்றியும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல. மற்ற நாட்டு மக்களைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டாலே போதுமானது.
குடியியல் கல்வி (Civic Education)
2007 கலைத்திட்ட மறுசீரமைப்பில் தரம் 6 தொடக்கம் 9 வரை வாழ்க்கைத்தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும் எனும் பாடம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே வேளை சிரேஷ்ட இடைநிலைப் பிரிவில் 10, 11 இல் தெரிவுப்பாடங்களுள் தொகுதி 1 இல் குடியியற் கல்வியும் மக்களாட்சியும் எனும் பாடம் அறிமுகம் செய்யப்பட்டது.
2015 கலைத்திட்ட மறுசீரமைப்பில் தரம் 6 தொடக்கம் 9 வரை “குடியியற் கல்வி” என அந்த பாடம் மறுசீரமைக்கப்பட்டது. அதேபோல் சிரேஷ்ட இடைநிலைப் பிரிவில் 10, 11 இல் தெரிவுப்பாடங்களுள் தொகுதி 1 இல் குடியியற் கல்வி எனும் பெயரில் அந்த பாடம் மறுசீரமைக்கப்பட்டு இன்று வரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மனித சமுதாயத்தின் சுதந்திரம்> சமத்துவம்> சகோதரத்தவம்> தனி மனிதனின் சுய மரியாதை ஆகியவை பற்றிய கருத்துக்கள், சனநாயக ஆட்சி அதன் பண்புகள் அரசியலமைப்பு, பிரசைகளுக்கள்ள உரிமைகள் கடமைகள், சட்டம், நீதி, சர்வதேச நிறுவனங்கள் என பல்வேறு கருத்துக்கள் குடியியற் கல்வி பாடத்தினூடாகக் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக நம்மிடையே பல்வேறுபட்ட பண்பாடுகள் இருந்தாலும் “வேற்றுமையில் ஒற்றுமை எனும் பக்குவம்” மாணவர்களிடையே வளர்க்கப்படுகின்றது.
முடிவுரை
மேற்படி கருத்துக்கள் மூலம் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்> சர்வதே புரிந்துணர்வுக்கும் கல்வியின் அவசியம் பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ளோம். ஆனாலும் இதற்கு இடையூறாக இருக்கும் இனவாதம், அடிப்படைவாதம், சாதியம், வகுப்பு வாதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மொழிவெறி, கலாசார வேறுபாடுகள், பிரதேசவாதம், அரசியல் பிரச்சினைகள் களையப்பட்டு மனித வாழ்க்கையின் உயர் மதிப்புக்களான வாய்மை, அல்லது உண்மைப்பற்று, நேர்மையான நடத்தை, அமைதியில் நாட்டம், பிறரிடம் அன்பு காட்டல், அகிம்சை முறையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளல்> என்பன சமூதாய நலனுக்கு உதவுவதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் சர்வதேச புரிந்தணர்விற்கும் இன்றியமையாதவை என்றால் மிகையாகாது.
“நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு” திருக்குறள் 953