பின்லாந்தின் கல்வி முறைமை – ஓர் ஆய்வு

பின்லாந்தின் கல்வி முறைமை – ஓர் ஆய்வு
திருமதி. தனுஷியா ராஜசேகர்,SLEAS-II ,M.Ed.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்வி அலுவலகம்,பட்டிருப்பு
🛑 முகவுரை
உலகின் பல்வேறு நாடுகளும் அறிவுப் பொருளாதாரம் எனும் எண்ணக்கருவை நோக்கி தமது செயற்பாடுகளை திட்டமிட்டு கல்விக் கொள்கைகளை வடிவமைத்து, அமுலாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இன்றைய காலகட்டத்தில் அறிவுப் பொருளாதாரத்தில் முன்னணியில் திகழும், உலகின் பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகளையும் தன் கல்விமுறையினால் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கும் முதற்தர நாடாக திகழ்வது பின்லாந்தாகும். அந்தவகையில் பின்லாந்தின் கல்விமுறை தொடர்பில் சற்று ஆராய்வது பொருத்தமானதாக அமையும்.
🛑 பின்லாந்து நாட்டின் பின்னணி
பின்லாந்து வட ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றாகும். இது சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்நாட்டின் மேற்குப்புறமாக நோர்வேயும் கிழக்குப்புறமாக எஸ்டோனியாவும் காணப்படுகின்றன. ஏறத்தாழ 338,145 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட இந்நாட்டில் சுமார் 6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இங்கு பினிஷ், சுவிடிஷ் ஆகியன தேசியமொழிகளாகக் காணப்படுகின்றன. பின்லாந்தின் தலைநகராகிய ஹெல்சிங்கி மக்கள் செறிவாக வாழும் நகராக விளங்குகின்றது.
பின்லாந்து 1917இல் ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு பிரதான இயற்கை வளமாக காடுகள் காணப்படுகின்றன. இந்நாட்டில் இரண்டாம் உலகப்போர் வரையிலும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி ஏற்படாத காரணத்தினால் அக்காலங்களில் வறுமைநிலையே காணப்பட்டது. எனினும், சனநாயகமுறைமை வலுவுள்ளதாக விளங்கியமையாலும், ஊழலற்ற அரசாங்க முறைமை காரணமாகவும் இங்கு யாவருக்கும் கல்விவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.
2ம் உலகயுத்தத்தின்போது சோவியத் யூனியனிடமிருந்து தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்ட பின்லாந்து இவ்யுத்தத்தின் பின் தனது நாட்டில் நிலவிய அரசியல் நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி சோவியத் யூனியனுடன் தனது வர்த்தகத்தை விரிவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. 1970 இன் பிற்பகுதிகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 வீதத்தினை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கியதுடன் பிராந்திய முகவர் நிலையங்கள் மூலம் தொழிநுட்பப் பூங்காக்கள் எனும் செயற்றிட்டங்களையும் அறிமுகம் செய்தது. மேலும், விரிவான மற்றும் முறையான அபிவிருத்திப் பணிகளுடன் கல்வித்துறையில் மறுபயிற்சியையும் மேற்கொண்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி அபிவிருத்திப்பணிகள் மூலம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கல்வியில் அதிகமுதலீடு செய்வதற்குரிய வாய்ப்புக்கள் என்பன கிடைக்கப்பெற்றன. இவ்வாறான அனுகூலங்கள் காரணமாக பின்லாந்து இன்றும் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 வீதத்தினை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
பின்லாந்தின் தற்போதைய கல்வி நிலை தொடர்பான சில தகவல்கள்
2017 ஆம் ஆண்டிற்குரிய உலகக் கல்வி முறைத்தரப்படுத்தல் கணிப்பீட்டின் பிரகாரம் பின்லாந்து 3ஆவது இடத்தில் காணப்படுகின்றது. இத்தரப்படுத்தலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்தும், இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரும் காணப்படுகின்றன. 2006 இல் மேற்கொள்ளப்பட்ட உலகக்கல்வி முறைத்தரப்படுத்தலில் பின்லாந்து முதலிடத்தைத் தட்டிக்கொண்டது. உலகிலேயே குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்தே முன்னணியில் இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் உலகநாடுகளில், குழந்தைகள் 100 சதவீதம் பாடசாலை செல்லும் நாடாகவும், பல்கலைக்கழகப் பட்டத்தை ஏறத்தாழ அனைவரும் பெறுகின்ற நாடாகவும் பின்லாந்தே விளங்குகின்றது.
2019 ஆம் ஆண்டிற்குரிய புள்ளிவிபரத் தகவல்களின்படி பின்லாந்து 3450 பாடசாலைகள் காணப்படுகின்றன. இதில் 50 ற்குக் குறைவான மாணவர் தொகையையுடையவை 1099 ம்,
50 – 99 வரையான மாணவர் தொகையையுடையவை 637 ம்,
100 – 299 வரையான மாணவர் தொகையையுடையவை 1024 ம்,
300 – 499 வரையான மாணவர் தொகையையுடையவை 560 ம்,
குறைந்தபட்சம் 500 மாணவர் தொகையைக் கொண்டவை 130 ம் ஆகும்.
இத்தகைய கல்விப் பின்புலத்தைக் கொண்ட பின்லாந்தின் வகுப்பறைக் கல்வி நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காகவும், அதனூடாகக் கற்றுக்கொள்வதற்காகவும் வருடந்தோறும் நேரடியாக அங்கு விஜயம் செய்யும் கல்வியியலாளர்களின் கூட்டம் வருடாவருடம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனடிப்படையில் வருடாந்தம் 56 நாடுகளிலிருந்து சுமார் 15,000 வெளிநாட்டுக் கல்வியியலாளர்கள் பின்லாந்துப்பள்ளிக்கூட கல்வி முறைமையை அறிந்துவர அங்கு விஜயம் மேற்கொள்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் 27% ஆண்டு வருமானத்தையும் அந்நாடு பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் சிறந்த மூன்றாம் நிலைக் கல்வியை வழங்கும் முதற்தர நாடாக பின்லாந்து World Economic Forum (உலக பொருளாதார மன்றம்) மூலம் பெயரிடப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில் ரஷ்யாவின் குடியேற்றநாடாக இருந்த பின்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே தலைசிறந்த பாடசாலைக் கல்விமுறைமையைப் பின்பற்றும் முதற்தர நாடாகவும், தற்போது நிலவுகின்ற பாடசாலைக் கல்விமுறைமையில் அதிசிறப்பான நிலையை தக்க வைத்துள்ள நாடாகவும் உலக நாடுகளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது எப்படி என்ற ஆச்சரியமே பலரையும் இந்நாட்டுக்கல்விமுறைமை பற்றி அறியத்தூண்டுகின்ற உந்துசக்தியாகக் காணப்படுகின்றது. 2034 ஆம் ஆண்டிற்கான கல்விக்கான திட்டங்களை 2017 ஆம் ஆண்டிலேயே 5 மிகச் சிறந்த, நிபுணத்துவம் மிக்க ஆசிரியர் குழுக்களைக் கொண்டு Learning Environment, Phenomenon Based Learning, Language Interaction and Thinking Skills, Portfolio Learning, Assessment and Comprehensive Learning, STEAM (Science, Technology, Engineering, Arts and Mathematics) Education போன்ற பரப்புக்களில் கல்விக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மேலும் Finnish National Agency for Education 2018 ஆம் ஆண்டு சர்வதேச மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் 83% மாணவர்கள் உயர்கல்விக்காக பின்லாந்தினை தெரிவு செய்வதில் தமது விருப்பத்தினைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் சிறந்த தரம் மற்றும் கவர்ச்சியான கல்வி வழங்கல், சர்வதேச மாணவர்களை வரவேற்கும் பாங்கு, கற்றலுக்கான சிறந்த சூழல், தரமான ஆசிரியர்கள், சிறந்த வாழ்க்கைத் தரம், தொழில் வழிகாட்டலும், அதற்கான ஆதரவும், உயர்கல்வியின் பின்னரான தொழில்வாய்ப்புக்கள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் போன்ற காரணங்களைத் தமது இத் தெரிவுக்கான காரணங்களாக முன்வைக்கின்றனர்.
பின்லாந்தின் கல்விக் கொள்கையும், கல்வி இலக்குகளில் காணப்படும் பிரதான உள்ளடக்கங்களும்.
பின்லாந்தின் கல்வி முறைமையில் கல்வியின் தரம் பேணல், பால்நிலை, பிராந்திய, சமூகப் பொருளாதார வேறுபாடுகளின்றி அனைவருக்கும் சமத்துவமான கல்வி எனும் கொள்கை வலுவாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேலும், இந்நாட்டின் கல்வி இலக்குகளில் எவரும் அடிப்படைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருத்தல் கூடாது, அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி, தனியாளின் கல்விச்-சித்திக்கான அளவீடு அவருடைய கற்றல் பெறுபேறுகளாக அளவிடப்படுதல், தொடர்ச்சியான தர உயர்வும் புதுப்பித்தலும் என்பன போன்ற பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பின்லாந்தின் தேசிய கலைத்திட்டத்தில் காணப்படும் தேர்ச்சிகள்
பினலாந்தின் தேசிய கலைத்திட்டத்தில் பின்வரும் 07 அடிப்படைத் தேர்ச்சிகள் காணப்படுகின்றன.
1. Thinking and Learning to Learn – சிந்தித்தல் மற்றும் கற்றலுக்கான கற்றல்
2. Cultural Literacy, Communication and Expression – கலாச்சார அறிவு, தொடர்பாடல் மற்றும் வெளிப்பாடு
3. Managing daily life, Taking care of oneself and others – அன்றாட வாழ்வை முகாமை செய்தலும், தன்னையும் ஏனையோரையும் கவனித்தல் மற்றும் பராமரித்தல்
4. Multi Literacy – பல்துறையறிவு
5. ICT Skills – தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத் திறன்கள்
6. Entrepreneurial and Work life skills – தொழில் முனைவோர் மற்றும் தொழில் வாழ்க்கைக்கான திறன்கள்
7. Participation in and Building Sustainable Future – நிலைபேறுடைய எதிர்காலத்தை உருவாக்கலும் பங்கேற்றலும்
மேற்கூறப்பட்ட தேர்ச்சிகளை மையப்படுத்தியதாக கலைத்திட்ட உள்ளடக்கம் ஒழுங்குபடுத்தப்-பட்டுள்ளது.
பின்லாந்தின் கல்விக் கட்டமைப்பு
பின்லாந்து நாட்டில் பிள்ளைகள் தமது ஏழாவது வயதிலேயே தரம் ஒன்றில் கால்த்தடம் பதிக்கின்றனர். இங்கு 7-13 வயது வரை (தரம் 1-6) ஆரம்பக்கல்வி வழங்கப்படுகின்றது. ஆரம்பக்கல்வியானது அந்நாட்டின் தேசிய மொழிகளாக விளங்குகின்ற பைனிஷ் அல்லது ஷ்வீடிஷ் மொழிகளில் வழங்கப்படுகின்றன. ஆரம்பக்கல்வியில் மகிழ்ச்சிக்கான வாசிப்பு (Reading For Pleasure) ஊக்குவிக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகக் காணப்படுகின்றது. தரம் 6 வரை வழங்கப்படுகின்ற இவ்வடிப்படைக்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் Mother tongue and Literature: Finnish or Swedish, The other national language: Swedish or Finnish, Foreign Languages, Environmental Studies, Health Education, Religion or Ethics, History, Social Studies, Crafts, Mathematics, Physics, Chemistry, Biology, Geography, Physical Education, Music, Visual Arts, Home Economics ஆகிய பாடங்கள் பொதுவாகக் கற்பிக்கப்படுகின்றன. ஆரம்பக் கல்வியினைத் தொடர்ந்து 14-16 வயது வரை (தரம் 7-9) நடுநிலைப்பள்ளியில் (Middle School) மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். இதன் பின்னர் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்காக பல்கலைக்கழகங்களிற்கு GPA அல்லது நேர்காணல் அல்லது கல்விசார் பரீட்சைகள் என்பவற்றின் வாயிலாக அனுமதிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகக் கல்வியில் முக்கிய துறைகளாக சட்டம், மருத்துவம், விஞ்ஞானம், கல்வியியல், மானிடவியல் போன்றவை காணப்படுகின்றன.
பின்லாந்து நாட்டின் கல்வித் துறையில் காணப்படும் சிறப்பம்சங்கள்
1. கல்வியில் தனியார் துறையினருக்கு இடமில்லை.
பின்லாந்தின் பாடசாலைக்கல்வி 100 சதவீதம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றது. உலகில் எந்தவொரு தனியார் பாடசாலையும் காணப்படாத ஒரே நாடாக பின்லாந்தே விளங்குகின்றது. இங்கு மேலதிக, தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும், இங்கு கல்வி 100% இலவசமாக வழங்கப்படுவதோடு வரவு-செலவுத்திட்டத்தில் கல்விக்கு பெருந்தொகை நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எடுத்துக்காட்டாக 2017 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 6.9 சதவீதம் (6.8 பில்லியன் யூரோக்கள்) கல்விக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
2. பரீட்சைகள் இடம்பெறுவதில்லை
பின்லாந்துப் பாடசாலைகளில் பரீட்சைமுறைகள் காணப்படுவதில்லை. இங்கு தேர்வில் முதலிடம் பெறுபவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களின் நிலைகள் என்பன அறிவிக்கப்படுவதுமில்லை. அத்துடன் மாணவர்கள் பரீட்சைகளின் அடிப்படையில் தரம்பிரிக்கப்படுகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுவதில்லை. இங்கு ஒட்டுமொத்தமாக பரீட்சைமையக்கல்வி முறைமை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பின்லாந்தில் எல்லாவகையான திறமை மட்டங்களையும் கொண்ட குழந்தைகள் ஒரே வகுப்பறையிலேயே கல்வி கற்கின்றனர். இங்கு ஐக்கிய அமெரிக்கா போன்று மீத்திறன் கூடிய மாணவர்களுக்கொரு தனியான பாடசாலை, கற்றல் இடர்பாடுடையோருக்கு வேறொரு தனியான பாடசாலை என்ற பாடசாலை வேறுபாடுகளோ, வகுப்பறை வேறுபாடுகளோ காணப்படுவதில்லை. மாணவர்கள் அவர்களது ஆர்வத்திற்கேற்ற வகையில் 13 வயதுக்குப் பின்னரே தரம்பிரிக்கப்படுகின்றனர். மாணவர்கள் தமது 13 ஆண்டு பாடசாலைக் கல்விக்காலத்தில் எதுவித பொதுப்பரீட்சைகளுக்கும் தோற்றவேண்டியதில்லை. ஆசிரியர்களே மாதிரிகளைக் கொண்டு பரீட்சைகளைத் தயாரித்து நடாத்துவதால் பாடசாலைக்குப் பாடசாலை பரீட்சைகள் வேறுபடுகின்றன. உயர்நிலைப் பள்ளி இறுதியில் மாத்திரமே தேசிய மெற்றிக்குலேசன் பரீட்சை எனும் ஒரு பொதுப் பரீட்சை நடைபெறுகிறது. அப்பரீட்சையிலும் விரும்பியோர் மாத்திரமே தோற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. சிறப்பான பாடசாலை முறைமை காணப்படுதல்
பின்லாந்தில் ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் வயது 7 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு பிள்ளையின் முறைசார் கல்வி 7 வயதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. மாணவர்கள் முறைசார் கல்வியினுள் நுழைவதற்கு முன்பாக எமது நாட்டில் இருப்பதுபோல முன்பள்ளி முறைமையோ அல்லது மொன்டசூரி முறைமையோ அந்நாட்டில் காணப்படுவதில்லை. இதற்கான அரச அங்கீகாரங்களும் இங்கு காணப்படாமையும் சிறப்பம்சமேயாகும். 7 வயதில் பாடசாலை சேரும் பிள்ளை முதல் 3 ஆண்டுகளும் சிறிது நேரமே நேரடியான கற்றலில் ஈடுபடும். ஏனைய நேரங்களை விளையாட்டுக்கள் மற்றும் ஜிம் போன்ற உடல், உள விருத்திச் செயற்பாடுகளிலேயே கழிக்கும். 13 வயதுவரை எந்தத் தேர்வையும் எதிர்கொள்ளாத பின்லாந்துப் பிள்ளைகள் உலகளாவிய ரீதியில் நடைபெறும் தேர்வுகளில் பங்குகொண்டு முதலாவது இடத்தைத் தக்கவைக்கின்றனர் என்பது பெரும் ஆச்சரியத்தையே எற்படுத்துகின்றது.
4. சிறந்த வகுப்பறைப் பண்புகள் காணப்படுதல்
பின்லாந்தில் ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர் தொகை 600 ஐ விட அதிகரிக்க முடியாது. அதிகபட்சம் 600 பேர் மாத்திரமே ஒரு பாடசாலையில் கல்வி கற்கலாம். வகுப்பறையொன்றில் அதிகபட்ச மாணவர் தொகை 26 ஆகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும், பெரும்பாலான பாடசாலைகளின் வகுப்பறைகளில் சாராசரி மாணவர் தொகை 20 ஆகவே காணப்படுகின்றது.
வகுப்பறையின் விஷேட அம்சங்களுள் மற்றுமொன்று வகுப்பறையினுள் நுழைகின்ற மாணவர்கள் பாதணிகள் அணிந்து வராமல் வெறுங்கால்களுடனேயே வருகின்றனர். தமது சொந்த வீட்டில் உற்றார் உறவினர்களோடு இருப்பதுபோன்ற உணர்வுடன் மாணவர்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு இங்கு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் வைத்து ஆசிரியர்கள் எவரும் எந்தவிதமான பிரத்தியேக வீட்டு வேலைகளையும் மாணவர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக மாணவர் ஒருவர் தனது கற்றலுடன் தொடர்புடைய வகையில் வீட்டிலிருந்து எதைச் செய்து வருகின்றாரோ அதுவே வீட்டுவேலையாகக் கருதப்படும். மேலும், ஒவ்வொரு குழந்தையினதும் மருத்துவ ஆலோசனைக்காகவும் ஆரோக்கியத்தைப் பேணவும் பாடசாலைதோறும் மருத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியர்களின் விரிவுரைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதை விட தாமாக இயங்குதல், விளையாட்டுக்களில் ஈடுபடல், துருவி ஆராய்தல் போன்றவற்றின் மூலம் எதையேனும் கற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆரம்பக்கல்வி நிலையில் மாணவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக ஒரு ஆசிரியரிடமே ஆறு ஆண்டுகள் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இதன்காரணமாக ஆசிரியர்கள் பிள்ளை தொடர்பில் அவர்களுடைய பெற்றோர்களுடன் நெருக்கமான இடைவினையை ஏற்படுத்தி பிள்ளையின் இயலுமைகளை உச்ச நிலைக்கு கொண்டு வர முடியும் எனக் கருதப்படுகின்றது.
5. தொழில் வாண்மைமிக்க சிறப்பான ஆசிரியர் குழாம் காணப்படுதல்
பின்லாந்தில் ஆசிரியர்களை நம்பி அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்கின்றது. ஒரு ஆசிரியருக்குரிய சராசரி மாணவர் எண்ணிக்கை 20 ஆகக் காணப்படுகின்றது. பாடசாலை நாளொன்றில் அரைப்பகுதியே அவர்கள் கற்பித்தலில் ஈடுபடுகிறார்கள். ஏனைய நேரங்களில் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.
பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது மருத்துவர் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் பணிகளுக்கு ஒப்பான சம அந்தஸ்து உடையதாக காணப்படுகின்றது. அதாவது வாண்மைத்துவம் வாய்ந்த தொழிலொன்றாகவே ஆசிரியத் தொழில் போற்றப்படுகின்றது. வைத்தியருக்கு நிகரான அதே அளவு ஊதியமே ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகின்றது. இதமாத்திரமல்லாமல் வரவு-செலவுத்திட்டத் தயாரிப்பில் கூட ஆசிரியர்கள் பங்கு கொள்ளும் ஒரே நாடாக பின்லாந்தே காணப்படுகின்றது. நாட்டிற்கென பொதுவான கலைத்திட்டம் காணப்பட்டாலும் அதற்கேற்ற கற்பித்தல் முறைகள், மாதிரிகள் என்பவற்றுடன் கூடிய பாடப்புத்தகங்களை ஆசிரியர்கள் தமது வசதி கருதி தெரிவு செய்யும் சுதந்திரமும் பின்லாந்தில் காணப்படுகின்றது.
எனினும், அந்நாட்டில் ஆசிரியராகுதல் என்பது அவ்வளவு இலகுவான காரியமன்று. ஆசிரியர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு முகம்கொடுப்பதோடு, கற்பித்தல் பயிற்சிக்கும் அப்பால் தலைமைத்துவ மற்றும் இராணுவபயிற்சிகளையும் பெறவேண்டியது அவசியமாகின்றது. ஆசிரிய சேவையிலே இணைந்து கொள்கின்ற ஒருவர் 6 மாதகால இராணுவப் பயிற்சி, ஒருவருட வகுப்பறை திறனாக்கற் பயிற்சி, ஏதேனும் ஒருபாடத்தில் செயற்றிட்டம், குழந்தை உரிமைகள், பயிலரங்கம், நாட்டின் சட்டதிட்டங்கள் என்பன குறித்து தேசிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பங்கேற்புச் சான்றிதழ்கள், தீயணைப்பு மற்றும் தற்காப்புப் பயிற்சிகள், முதலுதவி, மருத்துவத்துறைச் சான்றுகள் எனப் பலவிதமான பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெறவேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய நாடுகளில் விஞ்ஞான அணுகுமுறையான ஆசிரியர் பயிற்சி என பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பின்லாந்து நாட்டு வகுப்பறைகளில் கற்கும் 3 மாணவர்களில் ஒரு மாணவர் தன் வாழ்வில் ஆசிரியராவதையே இலட்சியமாகக் கொண்டுள்ளார் என கருத்துக் கணிப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பின்லாந்து நாட்டில் தேசிய ரீதியான பயிற்சியை முடித்துக்கொண்டு ஐந்து வருட வதிவிடபயிற்சியையும் நிறைவு செய்பவரே ஆசிரியராக முடியும் என்பது நியமமாகக் காணப்படுகின்றது. இவர்களது ஆகக்குறைந்த அடிப்படைக் கல்வித் தகைமையாக கல்வியில் முதுமாணிப்பட்டம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிப்போர் பலராயினும் தெரிவுசெய்யப்படுவோர் மிகக் குறைந்தளவினரேயாவர். எடுத்துக்காட்டாக வருடந்தோறும் சுமார் 15,000 விண்ணப்பதாரிகள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கின்ற போதும் அவர்களில் 2000 பேர் மாத்திரமே ஆசிரியப் பயிற்சி நெறிக்குத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
பின்லாந்தில் மாணவர்:ஆசிரியர் விகிதாசாரம் ஆரம்பக்கல்வியில் 14:1 ஆகவும், கீழ் இடைநிலையில் 9:1 ஆகவும், மேல் இடைநிலையில் 18:1 ஆகவும், மூன்றாம் நிலைக்கல்வியில் 19:1 ஆகவும் காணப்படுகின்றது.
6. நேரசூசி நெகிழ்ச்சித்தன்மையுடையதாகக் காணப்படுதல்
பின்லாந்தில் பாடசாலைகள் காலை 9.00 – 9.30 மணிக்கிடையே ஆரம்பமாகி மதியம் 2.00 – 2.45 மணிக்கிடையில் முடிவடைகின்றது. நாளொன்றுக்கு மாணவர்களுக்கு 4–5 பாடவேளைகள் மாத்திரமே நடைபெறுகின்றன. வாரத்தில் 20 மணித்தியாலங்கள் மாத்திரமே மாணவர் ஒருவர் கற்றலில் ஈடுபடுகின்ற காலமாக அமைகின்றது. இங்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு பாடவேளைகளுக்குமிடையே போதியளவு இடைவேளை (15–20 நிமிடங்கள்) வழங்கப்படுகின்றது. இவ்விடைவேளை மாணவர்களுக்கு கற்றதை உள்வாங்கல், புதிய காற்றைச் சுவாசித்தவாறே நடமாடி உடற்பயிற்சிகளில் ஈடுபடல் என்பவற்றுக்கு உதவுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை ஆசிரியர்களுக்கும் இவ்விடைவேளையானது ஆசிரியர் அறைகளில் ஓய்வெடுத்தல், கலந்துரையாடல், அடுத்த பாடவேளைக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு உதவுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
7. மாணவர் நலனோம்பல் செயற்பாடுகள் சிறப்பாகக் காணப்படுதல்
உளவியல் தலையீடுகள், கற்றல் இடர்களில் தலையீடு, வகுப்பிற்குள்ளேயான விசேட கல்வி, விசேட தேவைகளையுடைய மாணவர்களில் அக்கறை, மாணவர் பற்றிய தீர்மானம் எடுக்கும் முறை, மாணவர் நலன்புரிக் குழு ஆகிய இன்னோரன்ன நலனோம்பல் செயற்பாடுகள் மிகவும் சிறப்பான நிலையில் பின்லாந்தில் பேணப்படுகிறது.
8. பெற்றோருக்குப் போதியளவு சிறப்பான கல்விபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல்
பின்லாந்தில் பெற்றோருக்குப் பாடசாலை முறைமை, பாடசாலை நேரம், பாடசாலைப் பரீட்சைகள், மாணவர் நலன்புரி போன்ற சகல விடயங்களையும் உள்ளடக்கிய கல்விபற்றிய விழிப்புணர்வு அரசினாலும், பாடசாலைகளாலும் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கல்வியில் பெற்றோர் பங்குபற்றுதல்கள் அதிகமாகவும், சாதகமாகவும் அமைவதோடு பெற்றோர்கள் அதிபர் ஆசிரியர்களில் முழு நம்பிக்கை கொள்கின்ற மனநிலையும் கட்டியெழுப்பப்படுகின்றது. இவ்வாறான ஏற்பாடுகள் காரணமாக முரண்பாடுகள் அற்ற முறையில் மாணவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றது.
இங்கு ஆரம்பக் கல்வியை மாணவர்கள் ஒரே ஆசிரியரிடமே தொடர்ச்சியாக 6 வருடங்கள் கற்றுக் கொள்வதனால் ஆசிரியர்களும் குறித்த மாணவர்களின் குடும்பத்தில் ஒருவராக பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாகவும் பெற்றோரை வழிப்படுத்தும் செயற்பாடு ஆசிரியர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது.
பின்லாந்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி
இங்கு முன்பள்ளிகள் இல்லாத போதும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி (Early Childhood Development) 1-7 வயது வரையான பிள்ளைகளுக்கு அந்தந்தப் பிரதேசத்திலுள்ள மாநகரசபைகள் (Municipality) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பின்லாந்தில் 2020 ஆம் ஆண்டிற்குரிய புள்ளிவிபரத் தரவுகளின் படி 320 மாநகரசபைகள் காணப்படுகின்றன. இம்மாநகர சபைகள் அரசு தங்களுக்கு ஒதுக்கும் நிதியில் 30% இனையும், தாம் உழைக்கும் நிதியில் 56% இனையும், குறிப்பிட்ட மாநகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வதியும் குடும்பங்களிடமிருந்து அறவிடும் நிதியில் (இது குடும்பங்களின் பருமன், அக்குடும்பத்திலுள்ள 6 – 15 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை மற்றும் அக்குடும்பத்தின் வருமானத்திற்கேற்ப இவ்வறவிடப்படும் தொகை மாறுபடும்.) 14% இனையும் அப்பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பிலும் அடிப்படைக்கல்வி வழங்கலிற்கும் செலவிடப்படுகின்றது. இதில் மாணவர்களுக்கும் குடும்பங்களுக்குமான ஆலோசனைகள் (Instructions), பாடநூல்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் (Textbooks and other materials), பாடசாலை மதியஉணவு (School lunch),சுகாதார சேவைகள் (Health Services), நலன்புரிசேவைகள் (Welfare Services), பாடசாலைக்குத் தூரமான இடங்களிலுள்ள பிள்ளைகளுக்குரிய போக்குவரத்து (Transport for pupils living further away from the school)
PISA மதிப்பீடும், தரப்படுத்தலும்
PISA (Programme for International Student Assessment) அதாவது சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டம் என்பது 15 வயது பள்ளி மாணவர்களின் கல்வி செயல்திறனை அளவிடுவதன் மூலம் கல்வி முறைகளை மதிப்பீடு செய்யும் ஒரு உலகளாவிய ஆய்வு முறையாகும். இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (OECD) நடாத்தப்படும் ஓர் உலகளாவிய ஆய்வு ஆகும். இதில் இவ்வமைப்பின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகள் பங்குபற்ற முடியும்.
15 வயது நிரம்பிய பாடசாலை மாணவர்கள் தோற்றும் இம்மதிப்பீட்டில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் வாசிப்பு ஆகியவற்றுக்கான மதிப்பீடு இடம்பெறுகிறது. இது முதலில் 2000 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது, பின்னர் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை நடாத்தப்படுகிறது. நாடுகள் தமது கல்வி கொள்கைகள் மற்றும் விளைவுகளை மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கு உதவும் நோக்கில் ஒப்பிடக்கூடிய தரவை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். அத்துடன் இது மாணவர்களின் இது சிக்கல் தீர்க்கும் திறனையும் அறிவாற்றலையும் (Problem Solving Skill and Cognition) அளவிடுகிறது.
இதன் உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலமும் பிரெஞ்ச், மொழியும் காணப்படுகின்றபோதும் இப்பரீட்சையின் வினாத்தாள்களை 90 மொழிகளில் பெற்றுக் கொள்ளமுடியும். 2018 ஆம் ஆண்டு இப்பரீட்சையில் 79 நாடுகள் பங்குபற்றியுள்ளன. PISA பரீட்சையில் பெறப்படும் தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு தரவுப்பகுப்பாய்வுகளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: வகுப்பறைப்பின்னணி, மாணவர் ஆசிரியர் உறவு, ஆசிரியர் பயிற்சி, சமூக பொருளாதார நிலைமைகளுடன் மாணவர்களின் பெறுபேற்று மதிப்பீடு போன்றவை இதில் சிலவாகும். இந்த வகையில் இவற்றை அளவிடுவதற்கும் ஆராய்வதற்கும் பல்வேறு அளவுகோல்களை (Criteria) PISA பரீட்சை தரவுப்பகுப்பாய்வுகள் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இவ்வாறான பகுப்பாய்வுகளின் முடிவில் அவற்றிலும் பின்லாந்து முன்னணியில் திகழ்வது சிறப்பம்சம் ஆகும்.
2017 ஆம் ஆண்டிற்குரிய உலகக் கல்வி முறைத் தரப்படுத்தல் – உலகக் கல்வி முறைத்தரப்படுத்தல் (Global Education System Ranking) சர்வதேச ரீதியான 6 கல்விக் கண்காணிப்பு அமைப்புக்களிலிருந்து பெறப்படும் தரவுகளின் மூலம் இத்தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. அவையாவன, > The Organisation for Economic Co-operation and Development (OECD), Programme for International Student Assessment (PISA), the United Nation’s Economic and Social Council (UNESOC), The Economist Intelligence Unit (EIU) (பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு), The Trends in International Mathematics and Science Study (TIMSS) (சர்வதேச கணிதம் மற்றும் விஞ்ஞான ஆய்வின் போக்குகள்) and Progress in International Reading Study (PIRLS) (சர்வதேசரீதியான வாசிப்பின் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு).
இத்தரப்படுத்தலில் 2017 ஆம் ஆண்டு முதலிடத்தில் 154 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தும் இரண்டாம் இடத்தில் 140 புள்ளிகளுடன் சிங்கப்பூரும் 135 புள்ளிகளுடன் பின்லாந்தும் காணப்படுகின்றபோதும், 2017 இல் இத்தரவரிசைப்படுத்தல் புதிதாக 5 குறிகாட்டிகளையுள்ளடக்கி (5 – 14 வயது வரையான மாணவாகளில் பள்ளிக்கு வெளியே உள்ள ஆரம்ப வயது மாணவர்களின் எண்ணிக்கை, 15 – 18 வயதிற்கு இடையே பள்ளிக்கு வெளியே உள்ள இடைநிலைப்பிரிவு மாணவர்களின் எண்ணிக்கை, 15 முதல் 18 வயதுள்ளவர்களில் தொடக்கப்பள்ளியை முடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 5 முதல் 14 வயதுவரையான தொடக்கப்பள்ளிக்கான மாணவர் ஆசிரியர் விகிதம், 15 முதல் 18 வரையான மேல்நிலைப்பள்ளிக்கான மாணவர், ஆசிரியர் விகிதம்) மீண்டும் மேற்கொள்ளப்பட்ட Power Ranking Score தரவரிசைப்படுத்தலில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் அகிய நாடுகள் முறையே 94, 57 புள்ளிகளைப் பெற பின்லாந்து அதில் 114 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுக் கொண்டமையும் இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.
2018 PISA பரீட்சையில் பின்லாந்து நாடு மற்றும் OECD நாடுகளது கல்வி அடைவுமட்டம் தொடர்பிலான ஒரு ஒப்பீடு
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற PISA பரீட்சையில் பின்லாந்து மாணவர்கள் சராசரியாக கணிதத்தில் 507 புள்ளிகளையும், வாசிப்பு மொழித்திறனில் 520 புள்ளிகளையும், விஞ்ஞானத்தில் 522 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை பின்லாந்தில் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மீத்திறன் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களின் சராசரிப் புள்ளிகளுக்கிடையிலான வேறுபாடு 79 ஆகவும் காணப்படுகின்றது. மேற்குறித்த பரீட்சைக்குத் தோற்றிய OECD (Organization for Economic Co-operation and Development) (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு) (இது வளர்ச்சியடைந்த நாடுகளிடையே கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டு தற்போது 37 நாடுகளின் உறுப்புரிமையுடன் இயங்கி வரும் அமைப்பு ஆகும்.) நாடுகளின் மாணவர்கள் சராசரியாக கணிதத்தில் 489 புள்ளிகளையும், வாசிப்புமொழித்திறனில் 487 புள்ளிகளையும், விஞ்ஞானத்தில் 489 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை OECD நாடுகளில் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மீத்திறன் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களின் சராசரிப் புள்ளிகளுக்கிடையிலான வேறுபாடு 89 ஆகவும் காணப்படுகின்றது. இதனடிப்படையில் OECD நாடுகளினை விட பின்லாந்தே சிறந்த கல்வி அடைவு மட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை நன்கு புலனாகின்றது.
பின்லாந்தின் கல்வி முறைமை தொடர்பான ஆய்வுகள்
பின்லாந்தின் கல்வி முறைமையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு நாடுகளையும் சேர்ந்த கல்வியியலாளர்கள் மற்றும் பொருளியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு தொடர்ந்தும் அப்பணியில் ஈடுபட்டே வருகின்றனர். அதனடிப்படையில் பின்லாந்து கல்விமுறை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் An Analysis of the Educational Systems in Finland and the United States, Analysis of Finnish Education System to Question the reasons behind Finnish success in PISA, The Education System in Finland: A Success Story Other Countries can Emulate, Learning to learning Finland: Theory and policy- research and practice, A Research-Based Teacher Education in Finland- Dilemma for the Students என்பன பிரபல்யமான ஆய்வுகளாகக் காணப்படுகின்றன.
பின்லாந்திலும் ஆய்வாளர் தொகை அதிகமாகக் காணப்படுகின்றது. இங்கு 1000 உழைப்பாளர்களுள் 16 பேர் ஆய்வாளர்களாகக் காணப்படுகின்றார்கள். ஆனால் உலக வல்லரசாகிய ஐக்கிய அமெரிக்காவில் 1000 உழைப்பாளிகளுக்கு 11 பேரே ஆய்வாளர்களாகக் காணப்படுகின்றார்கள். இதனடிப்படையில் நோக்குகின்ற போது ஆய்வாளர்களை அதிகம் கொண்டிருக்கின்ற நாடாகவும் பின்லாந்தே காணப்படுகின்றது.
🛑 முடிவுரை
ஊழலற்ற அரசியல் முன்னெடுப்புக்களாலும், அது கல்வித்துறையில் அளித்திருக்கும் சுதந்திரமும், தூரநோக்கான கல்விச் சிந்தனைகள் மூலமாகவும், மாணவர் நேயமிக்க அணுகுமுறைகளுடன் கூடிய கற்பித்தல் மற்றும் விஞ்ஞான முறையான ஆசிரியர் பயிற்சி மூலமாகவும் பின்லாந்து கல்வித்துறையில் உயர்ந்து நிற்பது இலங்கை போன்ற கல்வித்துறையில் பல்வேறு எழுவினாக்களையுடைய நாடுகளுக்கு சிறந்த பாடத்தினையும், முன்மாதிரியையும் வழங்குகின்றது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்