கட்டுரை

மன வலிமையை அதிகரிப்பது எப்படி?

மன வலிமையை அதிகரிப்பது எப்படி?

How to increase mental strength?

S.Logarajah, Lecturer,

Batticaloa National College of Education

 

ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமாக உள்ளம் இருக்கும் என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ. ஆனால் இன்று ஆரோக்கியமான உடல் இருந்தாலும் உள்ளம் ஆரோக்கியமாக இருக்கிறதா? அதாவது மனது வலிமையாக இருக்கின்றதா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே காணப்படுகின்றது. மொத்தத்தில் ஆரோக்கியமான உடல் மற்றும் ஆராக்கியமான உள்ளம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதவை ஆகும். அதிலும் உடல் வலிமையை விட மனவலிமை என்பது மிகமிக முக்கியமானதாகும்.

மனவலிமை என்பது சவால்கள்,பின்னடைவுகள், மற்றும் துன்பங்களை நேர்மறையாகவும், ஆக்கத்திறனோடும் எதிர்கொள்ளும் திறன் ஆகும். இது பிரச்சினைகளை எதிர்கொள்வது, நேர்மறையான அணுகு முறையைப் பின்பற்றுவது, பின்னடைவுகளிலிருந்து மீண்டெழுவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பயிற்சி மற்றும் முயற்சி மூலம் நமது மனவலிமையை நாம் அதிகரித்துக் கொள்ளலாம். இக்கட்டுரை மன வலிமைக்கான அறிகுறிகளையும், மனவலிமையை அதிகரிப்பதற்குரிய வழிவகைகளையே ஆராய்கின்றது.

தளரா நம்பிக்கை. (Being optimistic)

நமது வாழ்க்கை எப்போதும் ஒரே நேர்கோட்டில் செல்ல வேண்டும் என்றில்லை. நேர்மறை – எதிர்மறை , வெற்றி – தோல்வி , இன்பம் – துன்பம்,  ஏற்றம் – இறக்கம், என எல்லாமே சேர்ந்த ஒரு கலவையாகவே நமது வாழ்க்கை இருக்கும். நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நல்லது நடக்கலாம். நமக்குத் தேவையே இல்லாத விடயமும் நடக்கலாம். எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுகின்ற, அதை நேர்மறையாக அணுகக் கூடிய மனப்பாங்கு நம்மிடத்தில் இருக்க வேண்டும். எது நடந்தாலும் அது நன்மைக்கே என எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு சிலர் சந்தோசமான விடயம் நடைந்தால் மட்டும் அளவுக்கு அதிகமாக அதைக் கொண்டாடுவார்கள். ஆனால் ஏதோ சின்னதொரு விடயம் சின்னதாய் அவர்களுக்கு பாதிப்புத் தருவதாக இருந்தாலும் அதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாதிருக்கும். அப்படி ஏதேனும் நடந்தால் அவர்கள் மொத்தமாகவே உடைந்து விடுவார்கள், இன்மேல் வாழ்க்கையே அவ்வளவுதான் என்று நினைத்து எல்லாவற்றையும் இழந்து விட்டதாக உணர்வார்கள். இப்படிப் பட்டவர்கள்  மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள். இதே மனநிலை நமக்கு எப்பவும் இருக்குமாயின் எந்தவொரு விடயத்தையும் நம்மால் இலகுவில் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும். எது நடந்தாலும் அது நம்மை பெரியளவில் பாதிக்கும். ஆகையால் முடிந்தளவுக்கு தளரா நம்பிக்கையுடன் உறுதியான நபராக  இருப்போம். எல்லாவற்றையும் நேர் மறையாக அணுக முற்படுவோம். நமது நேர்மறையான மனப்பாங்கிலிருந்து துளியளவும் விலகாமலிருப்போம், அப்படி இருந்தால் நாமும் வன வலிமையை அதிகரித்துக் கொள்ளலாம்.

எதுவும் எளிதானது அல்ல (Nothing is easy)

நம்மில் பலர் நினைப்பது யாதெனில் வாழ்க்கையில் எதுவாய் இருந்தாலும் விரைவாக நடைபெற வேண்டும். எல்லாமே இலகுவாக கிடைக்கப் பெற வேண்டும் என்றே நினைக்கின்றோம். அதாவது விதைத்தவுடனேயே அறுவடையை எதிர்பார்ப்பவர்கள்தான் அதிகம். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் வாழ்க்கையில் எதுவும் இலகுவாக கிடைப்பதும் இல்லை, விரைவாக நடப்பதும் இல்லை. எந்த வெற்றியும் தானாக வந்து நமது மடியில் விழாது. அதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு நேர்மறையான மனப்பாங்கு என்பது நமக்கு கட்டாயம் தேவையான ஒன்றாகும். நேர் மனப்பாங்கு நம்மிடம் இல்லாவிட்டால், நாம்  எதற்கு முயற்சி செய்ய வேண்டும்?

நாம் எது செய்தாலும் பிரயோசனம் இல்லையே,  ஏதோ காலத்தைக் கழித்து விட்டுப்போவோம் என குறுகிய மனப்பான்மையுடனேயே யோசிப்போம். இதைத் தாண்டிவர முதலில் நாம் நமது மனவலிமையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.  நமது நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கக் கூடாது. நமது கனவுக்காக தொடர்ச்சியாக பாடுபட வேண்டும். அதே போல் நம்மால் செய்ய முடியாத விடயத்துக்காக யாரையும் பழி சொல்லக் கூடாது. பணம் இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும், பணக்காரர்களால் தான்  வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றெல்லாம் தவறாக யோசித்து நமது முயற்சியை நாம் நிறுத்தக் கூடாது. உலகத்தில் எதுவும் இலகுவாகவும் தானகவும் நடக்காது, நமக்கு எது தேவையோ அதற்காக நாம்தான் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்காக போராட வேண்டும். அதற்கு முதலில் நாம் மனரீதியாக வலிமையுள்ள ஒரு மனிதனாக மாற வேண்டும் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்

எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. (Everything not in our control)

நாம் வாழ்வது நமது வாழ்க்கை என்றாலும், அதில் நிறைய விடயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சில விடயங்களை நம்மால் மாற்ற முடியும், சில விடயங்களை நம்மால் மாற்ற முடியாது. வாழ்க்கை முழுவதும் நிறைய குழப்பங்களும் தடைகளும், நாம் விரும்பக் கூடிய மற்றும் விரும்பாத விடயங்களும் நிறைந்ததாகவே இருக்கும். நாம் நினைத்தது மட்டும்தான் நடைபெற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, அதற்குச் சாத்தியமும் இல்லை. அப்படியிருக்கும் போது நம்மில் ஒரு சிலரால் நடக்கக் கூடிய எல்லா விடயத்தையும் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை, ஏதாவது ஒரு விடயம் நம்மை பெரியளவில் பாதித்து  அதே இடத்தில் நம்மை அமர்த்திவிடும். ஆனால் நாம் மனதளவில் வலிமையான நபராக இருந்தோமானால் வாழ்க்கையில் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டு எதையும் நினைத்து வாழ்க்கையில் அப்படியே நின்று விடாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம். நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய விடயங்களை நாம் கட்டுப்படுத்த நினைக்கலாம் அது தவறில்லை. ஆனால் நமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்களுக்காக நமது நேரத்தையும் சக்தியையும் வீணாக்குவது புத்திசாதூரியமான விடயமல்ல. ஆக, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மனநிலையை நம்மில் கட்டியெழுப்பிக் கொள்வோம். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விடயங்களுடன் நாம் போராடும் போது மனக்கவலை மற்று சுய சந்தேகம் போன்றவற்றைல் நம்மை நாமே கீழே தள்ளி விடுகின்றோம். எனவே வாழ்க்கையில் நடக்கக் கூடிய விடயங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம்.

மனவெழுச்சி நுண்மதி (Emotional Intelligence)

நாம் வெளிக்காட்டும் மனவெழுச்சிகளே நமது மனவலிமையின் பிரதிபலிப்பாக உள்ளன. எனவே நமது மனவெழுச்சிகளை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எப்போது உணர்ச்சிகளை வெளிக்காட்ட வேண்டும்?, எப்போது உணர்ச்சிகளை  வெளிக்காட்டக் கூடாது? என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவையற்ற இடங்களில் நமது உணர்ச்சிகளை வெளிக் காட்டுவோமானால் நாம் மனதளவில் பலவீனமானவர் என்பதை எல்லோரும் அடையாளம் கண்டுகொள்வர். நம்மில் பலர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருகையில் திடீரென அழுதுவிடுவோம். திரைக்கதை மற்றும் குணச் சித்திரதோடு உணர்சிபூர்வமாக நாம் இரண்டறக் கலப்பதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றோம். ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் சுய உணர்வோடு இருக்க வேண்டும். திரைப்படம் பார்த்து அழுகின்றோம், அதில் கூட நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நிஜ வாழ்க்கையில் எப்படி நாம் அவற்றைக் கையாள்வோம்?. நாம் மனதளவில் வலிமையானவர்களாக இருந்தால்  நாம் எந்த விடயத்தில் உறுதியாய் உள்ளோம், எதில் பலவீனமாக உள்ளோம், எதில் உணர்சி வசப்பட்டு அதோடு இரண்டறக் கலந்து விடுகின்றோம், எவற்றில் எல்லாம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பகுத்து ஆராய்ந்து நம்மைப் பற்றி நன்கு தெரிந்து வைதிருக்கலாம்.  நமது உணர்ச்சிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக நமது தவறான புரிந்துணர்வுகள், கெட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் அவற்றுக்குச் சார்பாகவுள்ள அனைத்தையும் நம்மால் கண்டறிய முடியும்.  நாம் மனவெழுச்சி நுண்மதியோடு இருப்போமானால்  பிறரோடு உறவுகளை நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும். அதைவிட முக்கியமாக நம்மை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும். எனவே எப்பவுமே உணர்ச்சி ரீதியாகவும் மனதளவிலும் வலிமையான மனிதராக இருக்க முயற்சிப்போம்.

கருத்துக்கள் /அபிப்பிராயங்கள் (chasing opinions)

நான் நினைப்பதுதான் சரி என்னுடய கருத்து மட்டுந்தான் சரியானது என்று ஒருபோதும் நாம் இருக்கவே கூடாது.  நமது கருத்தை மாற்றிக் கொள்ள நாம் தயாராக இல்லை என்றால் அது நமக்குத்தான் ஆபத்தாக முடியும். அது நமது மேம்பாட்டுக்கு சிறிதளவேனும் உதவாது. எப்பவும் திறந்த மனதுடனும் நெகிழ்ச்சித் தன்மையுடனும் இருக்க முற்படுவோம். நமது கருத்துக்கள் அபிப்பிராயங்களை மீள் நோக்குவதற்கான வாய்ப்பை நாம் எப்போதும் கொடுக்க வேண்டும். நான் யார் சொல்வதையும் கேட்க மாடேன், நான் செல்வதுதான் சரி என்று எப்போதும் குருட்டு நம்பிக்கையில் இருக்கக் கூடாது.  ஏனெனில் முதல் தடவையில் நாம் நினைப்பது எல்லாமே சரியாக இருக்கும் என்றில்லை.

நமது கருத்துக்களை மீள் நோக்கிச் சிந்திப்பதற்கான  நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். நாம் எப்போது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாக குறுகிய வட்டத்தினுள் இருக்கக் கூடாது. நமக்குத் தெரிந்த ஒரு விடயம் இன்னொருவருக்குத் தெரியாமல் இருக்கலாம். இன்னொருவருக்குத் தெரிந்த ஒரு விடயம் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆகவே மற்றவர்கள் ஏதாச்சும் திருத்தங்கள் சொன்னாலோ அல்லது கருத்துக்களைப பகிர்ந்து கொண்டாலோ முதலில் அதை கருத்திற்கொள்ள வேண்டும். அது சரி என்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளலாம். யார் சொல்வதையும் தட்டிக் கழிக்காமல், மற்றவர்களுடைய கருத்துக்களிலுள்ள நேரான தன்மையை  மதிக்க வேண்டும். யாரேனும்  பின்னூட்டல் அல்லது விமர்சனம் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இதிலிருந்து நாம் இன்னும் கற்றுக்கொள்ளலாம். நமக்கு கிடைக்கக் கூடிய மேலதிக அறிவு நம்மை இன்னும் வலிமையாக்கும்.

எல்லைகளை மீளவலுப்படுத்துதல் (Reinforce Boundaries)

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதை நாமும் சரியாக கைக்கொள்ள வேண்டும். எந்த விடயமாக இருந்தாலும் அதற்கான ஆரோக்கிய எல்லைகளை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தவொரு விடயமும் நம்மை பெரியளவில் பாதித்து நமது ஓட்டத்தை நிறுத்திடக் கூடாது. எது எதையோ நினைத்து வருத்தப்படுவதிலேயே நமது வாழ்க்கையை ஓட்டாமல் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இது நமது வலிமையான மனப்பாங்கிற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

தியாகம் செய்தல் (Ready to sacrifice)

உலகத்திலுள்ள எல்லாமே நமக்குத்தான் கிடைக்க வேண்டும் என நினைப்பது ஆராக்கியமான மனப்பாங்கு  அல்ல. வாழ்க்கையில் சில விடயங்களை  பெறுவதற்கு அல்லது அடைவதற்கு சில விடயங்களை நாம் தியாகம் பண்ணித்தான் ஆகவேண்டும். அதற்கு நாம் தயாராக இல்லையாயின் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நமது இலட்சித்தை அடைய வேண்டுமாயின் அதற்காக நாம் அதிகமாக உழைக்க வேண்டும். எப்பவுமே உல்லாசமாக இருக்க வேண்டும் என நினைக்காது, சில விடயங்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தற்போது நாம் கஸ்டப்பட்டு உழைத்தால் நாளைக்கு நாம் நினைக்கக் கூடிய வாழ்க்கையை நம்மால் அடைய முடியும். என்னால் எதையும் தியாகம் செய்ய முடியாது, நான் இப்போதே உல்லாசமாக இருக்க வேண்டும், கடினமாக உழைக்காமல் சும்மா நேரத்தைக் கடத்தினால் மட்டும் போதும் என்று நினைப்போமாயின் நாம் மனதளவில் வலிமையாக இல்லை என்றே பொருள். நமது இலக்கை அடைவதற்கு நம்மை நாமே தயார்படுத்தவில்லை என்றாகிவிடும். ஆகையால் எப்போதும் தியாகம் செய்யத் தயாராக இருப்போம். தியாகம் செய்வதுதான் எப்போதும் நமது வெற்றிக்கு உதவும்.

சுய ஒப்பீடு self-comparison

அவர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள், ஆனால் நான் மட்டும் ஒரே இடத்தில் இருக்கிறேன் நான் எதற்கும் அருகதை அற்றவன், என்னால் எதுவுமே செய்ய முடியாது ,என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதுண்டு. இதற்கு மூல காரணம் நம்மை நாம் மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்வதே ஆகும். தினமும் நாம் அனைவருமே இதை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் உலகத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், ஒரோ மாதிரி வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.  எல்லோருக்கும் வெவ்வேறு மாதிரியான வாழ்க்கை என்பது கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஒரோ மாதிரி அல்ல. அப்படி இருக்கையில் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நம்மை நாம் ஏன் தாழ்த்திக் கொள்ள வேண்டும். ஆனால்   மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்து, நமது வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பதை அறிய முற்பட்டால் அதில் தவறில்லை.

தோல்விகளில் இருந்து மீண்டெழுதல் (Back from failures)

முதல் முயற்சியிலேயே எல்லோரும் வெற்றி பெற முடியுமா? என்றால் அது கேள்விக்குறியாகவே அமையும். சிலர் விரைவாக இலக்கை அடைவார்கள், இன்னும் சிலருக்கு கொஞ்சம் காலம் தேவைப்படும். அவர்களது முதல் முயற்சி தோல்வியில் கூட முடியலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து எப்படி வெளியே வருகின்றோம் என்பதைப் பொறுத்துத் தான் நமது மன வலிமை இருக்கும். எத்தனை முறை தோற்றாலும் அதிலிருந்து  நிறையவே கற்றுக் கொண்டு  மீண்டும் நமது முயற்சியைத் தொடர வேண்டும், அதற்கு நேர் மறையான மனநிலை என்பது நமக்கு அவசியமாகும்.

கடந்து நடத்தல் (Walking Away)

நம்மால் எல்லா வேளைகளிலும் மற்றவர்களது எல்லாக் கருத்துக் களையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும். அப்படிப்பட்ட வேளைகளில் மற்றவர்களாடு நாம் வாக்குவாதம் செய்ய வேண்டி ஏற்படும், இதனால் முரண்பாடுகள் ஏற்படுவதற்குக் கூட வாய்புக்கள் உண்டு. ஆனால் மனவலிமை படைத்தவர்கள் எல்லாருடனும் எப்பவும் வாக்குவாதம் செய்யாமல்  அங்கிருந்து விலகிச் செல்பவர்களாக இருப்பர்.  ஏனெனில் எது பயனுள்ளது, எமது பயனற்ற முரண்பாடு என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவசியமான விவாதம் அல்லது முரண்பாடென்றால் மட்டும் அதற்காக நாம் நேரத்தைச் செலவிடலாம். அதனால் எந்தப் பிரயோசனமும் இல்லையாயின் விவாதம் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து நமது வேலைகளைப் பார்பதே மேலானதாகும். ஏனெனில் நம்மில் பலர் தாம் சொல்வது மட்டும் தான் சரி என்று நினைத்துக் கொண்டு பிறர் சொல்வதைக் கேட்பதில்லை, அப்படிப்பட்ட நபர்களோடு நாம் விவாதித்துக் கொண்டிருந்தால் நமது நேரமும், சக்தியுமே வீணாகும்.

எனவே மேற்சொன்ன இரகசியங்களை  நம்மில் வளர்த்துக் கொண்டு நாமும் வனவலிமை உள்ளவர்களாக மாறுவோம்.. மனவலிமைதான் எத்தகைய சூழ்நிலைகளிலும் நமக்கு உதவியாய் இருக்கும். நமது மனவலிமைதான் மற்றவர்கள் முன் நம்மை நேர் மறையானவர்களாக காட்டும். மனதளவில் நாம் வலிமையாக இருந்தால்தான் நாம் நினைப்பதைச் சாதிக்க முடியும். வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாக மாற வேண்டுமாயின் நமது மன வலிமையை அதிகரிப்பது மிக முக்கியமானதாகும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×