நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி?

நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பை உருவாக்குவது எப்படி?
How to Make a MicroTeaching Lesson Plan
S.Logarajah, Lecturer,
Batticaloa National College of Education
அறிமுகம் (Introduction)
நுண்ணிலைக் கற்பித்தல் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய குழு மாணவர்களுக்கு கற்பித்தலை நடாத்தும் ஒரு கற்பித்தல் நுட்பமாகும். இந்த அணுகுமுறை ஒரு ஆசிரியரின் குறிப்பிட்ட கற்பித்தல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும், அவர்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணவும், உடனுக்குடன் அவர்களின் செயல்திறன் குறித்த பின்னூட்டல்களை பெறவும் அனுமதிக்கிறது. குறைந்த மன அழுத்த சூழலில் ஆசிரியர்கள் தங்கள் அறிவு மற்றும் பாடம் பற்றிய புரிதலின் ஆழத்தை நிரூபிக்கவும் இது அனுமதிக்கிறது.
வழக்கமான பாடங்களைப் போலல்லாமல், நுண்ணிலைக் கற்பித்தல் அமர்வுகள் பொதுவாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். பாடத்தின் போது, ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட தலைப்பை முன்வைத்து, தலைப்பை விளக்க, செய்து காட்டல்கள், சகபாடிக் கலந்துரையாடல்கள் மற்றும் நிகழ்வு உருவகப்படுத்துதல்கள் போன்ற பல்வேறு கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவார்.
முக்கிய குறிப்புகளை விளக்குவதற்கு ஆசிரியர் ஓடியோ வீடியோ சாதனங்களையும் பயன்படுத்தலாம். பெரும்பாலான நுண்ணிலைக் கற்பித்தல் அமர்வுகளில் ஒரு பயிற்றுவிப்பாளர் அல்லது மேற்பார்வையாளர் இருப்பார். அவர் ஆசிரியருக்கு அவர்களின் முன்வைப்பின் தெளிவு மற்றும் அவர்களின் கற்பித்தல் பாணியின் செயல்திறனைப் பற்றய பின்னூட்டல்களை வழங்குவார். புதிய ஆசிரியர்கள் முதல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் வரை அனைவரும் தமது கற்பித்தல் திறனை மேம்படுத்த அல்லது புதிய கற்பித்தல் பாணிகளை கற்றுக்கொள்ளவே விரும்புவர். அந்தவகையில் நுண்ணிலைக் கற்பித்தல் ஆசிரியர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பெறுமதிமிக்கதாகவே இருக்கும்.
நுண்ணிலைக் கற்பித்தல் பாடக் குறிப்பு
நுண்ணிலைக் கற்பித்தல் பாடக் குறிப்பு என்பது பொதுவான (macro) பாடக்குறிப்பின் சிறிய பதிப்பாகும். அது பொதுவான (macro) பாடக்குறிப்பில் காணக்கூடிய அனைத்து கூறுகளையும் மிகச் சிறிய அளவில் உள்ளடக்கியது. ஆசிரிய மாணவர்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியான நுண்ணிலைக் கற்பித்தல் பாடக் குறிப்புகளை உருவாக்க வேண்டும். நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக் குறிப்பைத் தயாரிக்கையில் முதலில் நுண்ணிலைக் கற்பித்தல் திறன்கள் தொடர்பாக முழுமையான விளக்கத்தை பயிற்சி பெறும் ஆசிரியர் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் திறன் ஏன் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன் உட்கூறுகள் யாவை? ஒவ்வொரு உட்கூறும் எவ்வாறு அமையப் பெற்றுள்ளது, அதனைச் செயற்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அவர் அறிந்திருத்தல் வேண்டும். ஒரு திறனின் உட்கூறுகளை 5 நிமிடத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்தை நன்கு திட்டமிட வேண்டும்.
ஒரு திறனைக் கையாண்டு பயிற்சிபெறத் தேர்ந்தெடுத்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தவதற்கான பாடக்குறிப்பை தயாரித்தல் வேண்டும் அதனை கற்பித்தல் நிகழ்வு (Episode) என்று கூறுவர். கற்பித்தல் நிகழ்வில் எந்தப் பாடப்பகுதி அமைய வேண்டும் என்பதில் பெரும் சிக்கல் எழுவதுண்டு. நுண்ணிலைக் கற்பித்தலில் நாம் திறன்களில் பயிற்சி பெறுகின்றோமே தவிர பாட விடயத்தைக் கற்பிப்பதில் அல்ல என்பதனை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இங்கு பாட விடயம் கற்பித்தல் திறன்களின் உட்கூறுகளைக் கையாள்வதற்கு ஓர் ஊடகமாக அமைகின்றது. எனவே பாடப்பகுதி முக்கியமன்று. கற்பித்தல் திறன்களின் உட்கூறுகனைனக் கையாளுதலே முக்கியமானதாகும்.
கற்பித்தல் நிகழ்வுக்குரிய பாடப்பகுதி பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களின் ஒரு சிறிய தலைப்பாக அமையலாம். உதாரணம் கணித பாடத்தில் வட்டம், வர்க்க மூலம், விஞ்ஞான பாடத்தில் நெம்புகோல், இரசாயனப் பிணைப்பு, மொழிப்பாடத்தில் பெயர்சொல், அடைமொழி, சிலேடை, வரலாறு பாடத்தில் வரலாற்று மூலாதாரம், மன்னர்கள், உலகப்போர், குடியியல் பாடத்தில் அரசு, அரசியலமைப்பு, சட்டம், உரிமை, ஆரம்பப்பிரிவில் காகமும் நரியும் பேன்ற கதைகள் என… எதுவாகவும் இருக்கலாம். ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் பாடப்பகுதி நாம் பயிற்சி பெறவிருக்கும் கற்பித்தல் திறனின் உட்கூறுகள் அமைவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
நுண்ணிலைக் கற்பித்தலுக்கான பாடக்குறிப்பை எழுதும் முறை
கரும்பலகை, அஅல்லது வெண்பலகையைப் பயன்படுத்தும் திறன் போன்றவற்றை கயாண்டு பயிற்சிபெறுகையில் ஆசிரியரின் பங்கு அதிகமாக இருக்கும். ஆனால் ஏனைய திறன்களில் மாணவர்களது பங்கும் உயர்வானதாக, சிறப்பானதாக இருக்கும். எனவே பாட நிகழ்வை எழுதும் போது
ஆசிரியர் : ………….
மாணவர் :……………
ஆசிரியர் :…………..
மாணவர் : …………..
சம்பாசனை வடிவில் எழுதிக்கொள்வது மிகவும் எற்புடையதாக இருக்கும். உரையாடலை எழுதுகையில், பிரதான திறனின் உட்திறன்களை அடிப்படையாகக் கொண்டு பாடவிடயத்தை ஒட்டியதாக எழுத வேண்டும். ஆசிரியர் கேட்கும் வினாக்களுக்கு மாணவரின் விடை எவ்வாறு இருக்கும் என ஊகித்து அதனை எழுதுதல் வேண்டும். அவ்வாறு திட்டமாக குறிப்பிடாமல் பாட நிகழ்வுக்குரிய உரையாடலை எழுதி முடிக்க முடியாது. எனவே மாணவரிடமிருந்து எதிர்பார்க்கும் விடைகளை உத்தேசமாகக் குறிப்பிடுதல் தவறாகாது. ஆனால் பயிற்சி பெறுகையில் மாணவரிடமிருந்து எதிர்பார்த்த அதே விடை வராவிட்டால் சந்தர்ப்பத்திற்கேற்ப பாடவிருத்தியை திறன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
உட்கூறுகளைக் குறித்தல்
இயலுமானவை பாடப்பகுதிக்குரிய நிகழ்வை தெளிவாக எழுத வேண்டும். அவ்வாறு எழுதும் போது அல்லது எழுதி முடித்த பின்னர் உட் கூறுகள் எங்கெங்கே அமையப் பெற்றள்ளன என்பதை அருகில் குறித்துக் காட்டுதல் வேண்டும். பொருத்தமான இடங்களில் உட் கூறுகளைக் சுருக்க எழுத்துக்களால் குறித்துக்காட்டுதல் போதுமானது. எடுத்துக்காட்டாக விளக்குதல் திறனில் தொடங்கு தொடர் எனும் உட்கூறு வரும்போது (தொ.தொ) என்றும் தூண்டல் மாற்றும் திறனில் குரல் ஏற்றத் தாழ்வு என்பதை (கு.ஏ.தா) என்றும் அருகில் குறிப்பிடலாம். இவ்வாறு உட்கூறுகளைக் குறித்துக் காட்டுவதால்,
- பிரதான திறனிலுள்ள உட்கூறுகள் அனைத்தும் வந்துள்ளனவா என்பதை இலகுவாகக் கண்டு கொள்ளலாம்.
- உட்கூறுகளின் பொருத்தப்பாட்டை சரிபார்க்கலாம்.
பாட நிகழ்வில் பிரதான திறனிலுள்ள உட்கூறுகள் வரவேண்டுமே ஒழிய, அவை எத்தனை தடவை வரவேண்டும் என்பது முக்கியமல்ல. உட்கூறுகளின் தன்மைக்கேற்ப அது வருகின்ற தடவைகள் எண்ணிகையில் வேறுபடலாம். திறனில் பயிற்சி பெறுவதற்கான கால அளவு மிகக் குறைவாக இருப்பதனால் உட்கூறுகள் விடுபடாமையை உறுதிப்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதாகும்.
இக்கட்டுரையின் தொடர்ச்சியாக நுண்ணிலைக் கற்பித்தலுக்கான ஓரிரு மாதிரி பாடக்குறிப்புக்களை அல்லது பாட நிகழ்வுகளை எழுதியுள்ளேன் அவற்றை உன்னிப்பாகக் கவனித்து, பாட நிகழ்வு எழுதும் திறனை வளர்த்துக் கொள்வதோடு, ஒரு குறிப்பிட்ட திறனின் உட்கூறுகளை எவ்வாறு பொருத்தமான இடத்தில் சுருக்க எழுத்துக்களால் குறிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நுண்ணிலைக் கற்பித்தலுக்கான மாதிரிப் பாடக்குறிப்பு. (கணிதம்)
பயிற்சி பெறும் கற்பித்தல் திறன் : அறிமுகம் செய்யும் திறன்
- ஆசியரிய மாணவர் பெயர் : லோ.ஹேஷரன்
- வகுப்பு : தரம் 7
- பாடம் : கணிதம்
- அலகு : வட்டம்
- தேர்ச்சி : 24 வட்டங்கள் தொடர்பான கேத்திர கணித எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பதற்கு தர்க்க ரீதியாகச் சிந்திப்பார்.
- தேர்ச்சி மட்டம் : 24.1 வட்ட வடிவான உருவங்களைக் கொண்டு வெவ்வேறு அலங்காரங்களை உருவாக்குவார்.
- பாட விடயம் : வட்டத்தின் பகுதிகள்
- திகதி : 05.19
- நேரம் : 6 நிமிடங்கள்
- கற்பித்தல் திறனின் உட்கூறுகளும் சுருக்க எழுத்துக்களும் :
- முன்னறிவுத் தொடர்பு (மு. தொ)
- பொருத்தமான விடையளிப்பு (பொ.வி)
- பொருத்தமான உபகரணப் பயன்பாடு (பொ.உ.)
- தொடர்ச்சியைப் பேணுதல் (தொ. பே)
- பாடத் தலைப்பை அறிமுகம் செய்தல் (பா.அ)
பாட நிகழ்வு
ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே
மாணவர்கள் : வணக்கம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : விடுமுறை நாட்களில் வெளியூர் பயணம் செல்ல விரும்பமா?
மாணவர்கள் : ஆம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : நல்லது, அப்படியாயின் எந்த இடத்திற்கு பயணிக்க வேண்டுமென நினைக்கிறீர்கள் (தொ. பே)
மாணவர்கள் : பாசிக்குடா கடற்கரைக்கு
ஆசிரியர் : நீங்கள் அங்கு பயணிக்க வேண்டுமாயின் எதன் உதவியுடன் பயணிப்பீர்கள் (மு. தொ)
மாணவர்கள். : வாகனம் (பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியாகச் சொன்னீர்கள்,
ஆசிரியர் : எந்தெந்த வாகனங்கள் பிரயாணம் செய்ய உதவும் என நினைக்கிறீர்கள் (மு. தொ)
மாணவர்கள் : பஸ், வேன், கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்(பொ.வி)
ஆசிரியர் : எந்தெந்த வாகனங்களில் பயணம் செய்துள்ளீர்கள்?
மாணவர்கள் : அனைத்திலும்
ஆசிரியர் : இந்த வாகனங்கள் எதன் உதவியுடன் நகர்ந்து செல்கின்றன என்பதைக் கவனித்திருக்கின்றீர்களா? (தொ. பே)
மாணவர்கள் : ஆம்
ஆசிரியர் : வாகனங்கள் எதன் உதவியுடன் நகர்கின்றன. (மு. தொ)
மாணவர்கள் : சக்கரம்(பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியான விடை
ஆசிரியர் : பஸ்வண்டியில் எத்தனை சக்கரங்கள் உள்ளன. (மு. தொ)
மாணவர்கள் : நான்கு
ஆசிரியர் : நன்று
ஆசிரியர் : பஸ்வண்டியின் மாதிரியைக் காட்டுதல் (பொ.உ.)
ஆசிரியர் : பஸ் வண்டியினன் சக்கரங்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில் இருக்குமா அல்லை வெவ்வேறு வடிவங்களில் இருக்குமா? (தொ. பே)
மாணவர்கள் : ஒரே வடிவத்தில்
ஆசிரியர் : நன்று, அந்த வடிவத்தின் பெயரென்ன? (மு. தொ)
மாணவர்கள் : வட்டம் (பொ.வி)
ஆசிரியர் : மிகவும் நன்று
ஆசிரியர் : வட்டத்தின் மாதிரியைக் காண்பித்தல் (பொ.உ.)
ஆசிரியர் : வாகனத்தின் சக்கரங்கள் வட்டம் தான் நாம் இன்று வட்டத்தைப் பற்றியும் வட்டத்தின் பகுதிகளையுமே கற்கப் போகின்றோம் எனக் கூறி பாடத் தலைப்பை கரும்பலகையில் எழுதுதல் (பா.அ)
ஆசிரியர் : நன்றி பிள்ளைகளே
மாணவர்கள் : நன்றி சேர் / ரீச்சர்
மதிப்பீட்டு அளவுத்திட்டம் Rating scale
இல | கூறுகள் | மதிப்பீடு | ||||
மிக நன்று (5)
|
நன்று
(4)
|
சாதாரணம்
(3)
|
குறைவு
(2) |
மிகக் குறைவு (1)
|
||
1. | முன்னறிவுத் தொடர்பு (மு. தொ) | |||||
2 | பொருத்தமான விடையளிப்பு (பொ.வி) | |||||
3 | பொருத்தமான உபகரணப் பயன்பாடு (பொ.உ.) | |||||
4 | தொடர்ச்சியைப் பேணுதல் (தொ. பே) | |||||
5 | பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல் (பா.அ) |
பயிற்றுவிப்பாளர் ஒப்பம் :………………………………
திகதி : …………………….
நுண்ணிலைக் கற்பித்தலுக்கான மாதிரிப் பாடக்குறிப்பு. (வரலாறு)
பயிற்சி பெறும் கற்பித்தல் திறன் : அறிமுகம் செய்யும் திறன்
- ஆசியரிய மாணவர் பெயர் : லோ.இதன்யா
- வகுப்பு : தரம் 6
- பாடம் : வரலாறு
- அலகு : வரலாறு ஓர் அறிமுகம்
- தேர்ச்சி : 1.0 வரலாற்றைக் கட்டியெ ழுப்புவதற்குப் பயன்படும் மூலாதாரங்களைக் கற்று பகுத்தறியும் சிந்தனையை விருத்தி செய்து கொள்வார்.
- தேர்ச்சி மட்டம் : 1.2 மனிதன் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டியெழுப்புவார்.
- பாட விடயம் : மூலாதாரங்கள்
- திகதி : 05.19
- நேரம் : 6 நிமிடங்கள்
- கற்பித்தல் திறனின் உட்கூறுகளும் சுருக்க எழுத்துக்களும் :
- முன்னறிவுத் தொடர்பு (மு. தொ)
- பொருத்தமான விடையளிப்பு (பொ.வி)
- பொருத்தமான உபகரணப் பயன்பாடு (பொ.உ.)
- தொடர்ச்சியைப் பேணுதல் (தொ. பே)
- பாடத் தலைப்பை அறிமுகம் செய்தல் (பா.அ)
பாட நிகழ்வு
ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே
மாணவர்கள் : வணக்கம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : உங்கள் எல்லோருக்கும் உங்களது பிறந்த தினம் எப்போது என்று தெரியுமா?
மாணவர்கள் : ஆம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : உங்களது பிறந்த தினம் இதுதான் என்பதை நீங்கள் எவ்வாறு தெரிந்து கொண்டீர்கள் (தொ. பே)
மாணவர்கள் : பெற்றோர் கூறியதன் மூலமாக
ஆசிரியர் : நன்று
ஆசிரியர் : நன்று உங்கள் பிறந்த தினத்தை சரியாகக் காட்டும் ஆவணம் எதுவாக இருக்கும் என கருதுகிறீர்கள் (மு. தொ)
மாணவர்கள். : பிறப்புச்சான்றிதழ் (பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியாகச் சொன்னீர்கள்,
ஆசிரியர் : பிறப்புச் சான்றிதழில் உங்களைக் குறித்த என்னென்ன தகவல்கள் இருக்கும் (மு. தொ)
மாணவர்கள் : பெயர், பிறப்பு நடத்த திகதி நேரம், தாய் தந்தை விபரம், இனம், சமயம், பிறப்பு நடத்த இடம், பிறப்பை உறுதிப்படுத்தும் அதிகாரி தொடர்பான விபரம். (பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியாகச் சொன்னீர்கள்,
ஆசிரியர் : பிறப்புச் சான்றிதழ் ஒன்றின் பிரதியைக் காட்சிப்படுத்துதல் (பொ.உ.)
ஆசிரியர் : ஆக, பிறப்புச் சான்றிதழிலிருந்து ஒருவருடைய பிறப்பின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் அல்லவா? (தொ. பே)
மாணவர்கள் : ஆம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த வகுப்பறைக் கட்டடத்தின் நுழைவு வாயிலில் நினைவுப் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? (தொ. பே)
மாணவர்கள் : ஆம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : அந்த நினைவுப் பலகையில் என்னென்ன தகவல்கள் உள்ளன (மு. தொ)
மாணவர்கள் : யாரால் எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது என்பது பற்றிய தகவல்கள், யாரால் எப்போது திறந்து வைக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் (பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியான விடை
ஆசிரியர் : நினைவுப் பலகை ஒன்றின் புகைப்படம் ஒன்றைக் காட்டுதல் (பொ.உ.)
ஆசிரியர் : நினைவுப் பலகை மூலமாக இக்கட்டடம் பற்றிய ஆரம்ப கால தகவல்களை அறிய முடிகிறது. அல்லவா?. (தொ. பே)
மாணவர்கள் : ஆம் சேர் / ரீச்சர்
ஆசிரியர் : பிறப்புச் சான்றிதழ் , நினைவுப் பலகை போன்றவற்றை நாம் பொதுவாக எவ்வாறு அழைக்கலாம்
மாணவர்கள் : ஆதாரங்கள் அல்லது சான்றுகள், ஆவணங்கள் (பொ.வி)
ஆசிரியர் : மிகச் சரியாகச் சொன்னீர்கள்,
ஆசிரியர் : இவ்வாறு ஒருவரது அல்லது ஒரு பொருளினது அல்லது ஒரு நிகழ்வினது அல்லது ஒரு இடத்தினது ஒரு நாட்டினது ஆரம்ப கால வரலாற்றுத் தகவல்களை வழங்கும் சான்றுகள் ஆதாரங்கள், ஆவணங்களை நாம் பொதுவாக வரலாற்று மூலாதாரங்கள் என அழைக்கலாம்.
ஆசிரியர் : அத்தகைய வரலாற்று மூலாதாரங்கள பற்றியே நாம் இன்றைய பாடத்தில் கற்கவுள்ளோம். எனக் கூறி பாடத் தலைப்பை கரும்பலகையில் எழுதுதல்.
ஆசிரியர் : நன்றி பிள்ளைகளே
மாணவர்கள் : நன்றி சேர் / ரீச்சர்
மதிப்பீட்டு அளவுத்திட்டம் Rating scale
இல | கூறுகள் | மதிப்பீடு | ||||
மிக நன்று (5) | நன்று (4) | சாதாரணம் (3) | குறைவு (2) | மிகக் குறைவு (1) | ||
1. | முன்னறிவுத் தொடர்பு (மு. தொ) | |||||
2 | பொருத்தமான விடையளிப்பு (பொ.வி) | |||||
3 | பொருத்தமான உபகரணப் பயன்பாடு (பொ.உ.) | |||||
4 | தொடர்ச்சியைப் பேணுதல் (தொ. பே) | |||||
5 | பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல் (பா.அ) |
பயிற்றுவிப்பாளர் ஒப்பம் :………………………………
திகதி : …………………….