நுண்ணிலை கற்பித்தல் -தோற்றம், பொருள், வரைவிலக்கணம், கற்பித்தல் திறன்கள், சுழற்சி, முக்கியத்துவம், பண்புகள்

நுண்ணிலை கற்பித்தல்- தோற்றம், பொருள், வரைவிலக்கணம், கற்பித்தல் திறன்கள், சுழற்சி, முக்கியத்துவம், பண்புகள்
Micro teaching- Originate, Meaning, Definition, Cycle, Importance, Characteristics, Micro teaching teaching skills,
S.Logarajah, Lecturer,
Batticaloa National College of Education
அறிமுகம் (Introduction)
நுண்ணிலைக் கற்பித்தல் என்பது சிறியதுதான், ஆனால் அது முக்கியமான தலைப்பாகும். இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம் நுண்ணிலைக் கற்பித்தல் பற்றிய தெளிவான புரிதலை பெறலாம். நுண்ணிலைக் கற்பித்தலின் தோற்றம், பொருள், வரையறை கற்பித்தல் சுழற்சி, தேவை மற்றும் முக்கியத்துவம், பண்புகள், நுண்ணிலைக் கற்பித்தல் திறன்கள், பாடத் திட்டமிடல் என பல்வேறு விடயங்கள் பற்றிய தெளிவைப் பெற இக்கட்டுரை உங்களுக்கு உதவும்.
கற்பித்தல் வாய்மொழியாகவும் நிகழலாம் வாய்மொழியின்றியும் நிகழலாம். இவை இரண்டும் கலந்த நிகழ்வே கற்பித்தலாகும். நுண்ணிலை கற்பித்தல் (Micro teaching) என்பது ஆசிரியர் பயிற்சியில் பயன்படும் ஒரு வகை போதனா நுட்பமாகும். இது ஒரு கலை. ஆனால் எல்லோருக்ம் கைவந்த கலை அல்ல இது ஆசிரியரின் கற்பிக்கும் திறனை வளர்க்கப் பயன்படுகிறது. இந்த நுட்பத்தில், ஆசிரியர் ஒரு செயற்கைச் சூழ்நிலையில் வைக்கப்படுகிறார், அதில் அவர்களின் கற்பித்தல் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேலும் அவர்கள் பாட விடயத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற முனைகிறார்கள்.
தோற்றம் (Originate)
ஐக்கியஅமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச்சார்ந்த ஆராய்ச்சி மாணவர் கெய்த் அசெசன் (Keith Acheson) என்பவர், கற்பித்தல் செயல்முறையை, ஒளிப்பதிவு செய்து பின்னூட்டம் வழங்கலாம் என 1961-இல் முன்மொழிந்தார். 1963-இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டுவைட் ஆலன் (Dwight.W.Allen) என்பவர், நுண்ணிலை கற்பித்தல் என்னும் சொற் கோவையை முதன் முதலில் பயன்படுத்தினார்.
பொருள் (Meaning)
ஆசிரியரின் கற்பித்தல் திறன்களை (Teaching skills) வளர்த்துக் கொள்ள கட்டமைக்கப்பட்ட கற்பித்தல் முறையே நுண்ணிலை கற்பித்தலாகும். இங்கு நுண்ணிலை என்பது அளவு குறைக்கப்பட்டதை குறிக்கிறது. இதில்,
- தெரிவு செய்யப்பட்ட ஒரு கற்பித்தல் திறன்.
- மிகக் குறைவான மாணவர்கள் மாணவர்கள் (4-5)
- மிகக் குறுகிய நேரம் (5-10 நிமிடங்கள்)
- சிறியதொரு பாட விடயம்
என சிறிய அளவில் கற்பித்தல் ஒழுங்மைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும். இவ்வாறு உண்மையான வகுப்பறைக் கற்பித்தல் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் மிகச்சிறிய அளவில் இப்பயிற்சிக் கற்பித்தல் ஒழுங்கமைக்கப்படுவதால் இது “நுண்ணிலை கற்பித்தல்” எனப்படுகிறது. இப்பயிற்சியில் சக பயிற்சி ஆசிரியர்களே மாணவர்களாக தொழிற்படுவர் இதனால் இது “சகபாடிக் குழுக் கற்பித்தல்” (Peer group Teaching) எனவும் அழைக்கப்படுகிறது.
வரைவிலக்கணம் (Definition)
டுவைட் ஆலன் (Dwight.W.Allen, 1966) கூற்றுப்படி, “நுண்ணிலை கற்பித்தல் என்பது கற்பிக்கும் நேரம், மாணவர் எண்ணிக்கை, மற்றும் பாடவிடய அளவு என்பன குறைக்கப்பட்ட கற்பித்தல் செயல்பாடு” எனலாம்.
எம்.சி. நைட் (M.C.Knight, 1971) கருத்துப்படி, “நுண்ணிலை கற்பித்தல் என்பது அளவு குறைக்கப்பட்ட கற்பித்தல் செயல்பாடு. இதனூடாக புதிய திறன்களை வளர்க்கவும், பழைய திறன்களை மெருகேற்றவும் முடியும்”.
பி.கே. பாஸ்ஸி (B.K. Passi) “நுண்ணிலை கற்பித்தல் என்பது குறிப்பிட்ட கற்பித்தல் திறனைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு சிறிய பாட விடயமொன்றைக் கற்பிக்கும் ஒரு கற்பித்தல் நுட்பமாகும்.
கல்வியியல் தகவல் களஞ்சியம் (Encyclopedia of Education, Ed.Deighton. LC-1971) “நுண்ணிலை கற்பித்தல் என்பது உண்மையான, கட்டமைக்கப்பட்ட, அளவு குறைக்கப்பட்ட கற்பிக்கும் செயல்பாடு; இது ஆசிரியர் பயிற்சி, பாடத் திட்டடமிடல் மேம்பாடு மற்றும் ஆய்வுக்குப் பயன்படுகிறது”.
நுண்ணிலை கற்பித்தலின் குறிக்கோள்கள்
Objectives of Micro Teaching
நுண்ணிலை கற்பித்தல் என்பது ஒரு ஆசிரிய மாணவர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆக்கபூர்வமான முறையாகும். நுண்ணிலை கற்பித்தலின் நிகழ்ச்சி நிரலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களிலிருந்து இருந்து நன்கு புரிந்து கொள்ள முடியும்.
- இது குறிப்பிட்ட கற்பித்தல் நடத்தைகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
- நுண்ணிலைக் கற்பித்தல் மூலம் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நடத்தை மாற்றியமைக்கப்படுகிறது மற்றும் திறன் பயிற்சி மூலம் கற்பித்தல்-கற்றல் செயல்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- நம்பிக்கையுடன் நிகழ்நேர வகுப்புகளை எடுக்க ஆசிரியரை தயார்படுத்துதல்.
- இது ஆசிரியர்களின் அறிவு, திறன் மற்றும் திறன்களை வளர்க்க உதவுகிறது.
- இதன் மூலம் ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து உடனடி பின்னூட்டங்களைப் பெறுவார்கள், அவை அவர்களது வாண்மைத்துவ மேம்பாட்டிற்காக பயன்படும்.
- ஆசிரியர்களுக்கு இது ஒரு வகையான சோதனை என்பதால்இ ஆசிரியர் சிறப்பாக செயல்படத் தவறினால், அது மாணவர்களை ஆபத்தில் ஆழ்த்தாது.
தேவை மற்றும் முக்கியத்துவம் (Need and Importance)
பல்வேறு வகையான நுண்ணிலை கற்பித்தல் திறன்கள் ஆசிரியர்களின் தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. நுண்ணிலை கற்பித்தல் திறன்கள் ஏன் அவசியம் என்பதற்கான சில குறிப்புகள் இதோ,
- கற்றல்-கற்பித்தல் செயல்முறையில் ஒரு குறிப்பிட்ட திறனை மட்டும் தனித்துப் பயன்படுத்த முடியாது. அதே சமயம் ஒரு ஆசிரியர் எல்லா திறன்களிலும் சிறந்து விளங்க வேண்டுமெனில், அவை ஒவ்வொன்றாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்கு நுண்ணிலை கற்பித்தல் அவசியம்.
- நுணுக்குக்காட்டியில் அவதானிப்பது போல் ஒவ்வொரு கற்பித்தல் திறனும் இங்கு அவதானிக்கப்படுகின்றது..
- “எதைக்கற்பித்தல்” என்பதை விட “எப்படிக் கற்பித்தல்” வேண்டும் என்பதே இதன் அடிப்படையாகும்.
- ஆசிரியர் சிக்கலான நேரடி வகுப்பறைச் சூழலில் பயிற்சியை தொடங்காமல், சிக்கல் இல்லாத செயற்கைச் சுழலில் பயிற்சி பெற களம் அமைத்துக் கொடுக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
- நுண்ணிலைக் கற்பித்தலானது ஒரு அனுபவமிக்க ஆசிரியருக்கும், மாணவ ஆசிரியருக்கும் பழைய திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதிய உத்திகளை அறிந்து கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பினை வழங்குகின்றது.
- பயிற்சி ஆசிரியர்கள் வீடியோ பதிவுகள், மேற்பார்வையாளர்கள் அல்லது சகாக்களிடமிருந்து நேரடியாக கருத்துக்களைப் பெறுவார்கள்.
நுண்ணிலை கற்பித்தல் திறன்கள்
The Skills of Micro-Teaching
ஆசிரிய பயிற்சியைப் பெறுபவர் திறமையான ஆசிரியராக மாறுவதற்கு பல்வேறு வகையான நுண்ணிய கற்பித்தல் திறன்கள் அவசியம். நுண்ணிலைக் கற்பித்தலில் என்ன திறன்கள் உள்ளன என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அப்படியென்றால் கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள். பேராசிரியர்களான ஆலன் மற்றும் ராயல் ஆகியோர் நுண்ணிலைக் கற்பித்தல் திறன்களாக 14 திறன்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
- பல்வகை தூண்டல்கள் (Stimulus Variation)
- பாடம் தொடங்குதல் (Set Induction)
- மெளனமும் மொழி சார்பற்றக் குறிகளும் (Silence and Non-Verbal cues)
- பாடத்தை முடிவுறுத்துதல் (Closure)
- மீளவலியுறுத்தல் (Reinforcemen)
- சரளமாக வினாக்களைக் கேட்டல் (Fluency in asking questions)
- தூண்டும் வினாக்கள் (Probing questions)
- கடின வினாக்கள் – (Higher order questions)
- மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறிதல் – (Recognizing attending behavior)
- விரி சிந்தனையைத் தூண்டும் வினாக்கள் (Divergent thinking)
- விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்துதல் (Illustration and use of examples)
- விரிவுரையாற்றுதல் (Lecturing)
- திரும்பக் கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் (Planned repetition)
- தகவல் பரிமாற்றத்தைத் நிறைவு செய்தல் (Completeness of Communication)
அதேவேளை பேராசிரியர் பாஸி 13 திறன்களை அடையாளப் படுத்தியுள்ளார்.
- கற்பிக்கும் நோக்கங்களை திட்டமிடும் திறன் (Skill of writing Instructional Objectives)
- பாடத்தை அறிமுகப்படுத்தும் திறன் (Skill of Introducing a Lesson)
- சரளமாக கேள்வி கேட்கும் திறன் (Skill of Fluency in Questioning)
- துாண்டும் வினாக்கள் கேட்கும் திறன் (Skill of Probing questions)
- விளக்கிக் கூறும் திறன் (Explaining Skills)
- எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறும் திறன் (Skill of Illustration and use of examples)
- மெளனமும் மொழிச்சார்பற்ற குறிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Silence and Non-Verbal cues)
- பல்வகை தூண்டல்கள் பயன்படுத்தும் திறன் (Skill of Stimulus Variation)
- வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Reinforcement)
- கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன் (Skill of using Black board)
- மாணவரின் பங்கேற்பை அதிகரிக்கும் திறன் (Skill of pupil participation)
- பாடங்களை முடித்தல் திறன் (Skill of achieving Closure)
- மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறியும் திறன்
(Skill of Recognizing attending behavior)
ஆயினும் பொதுவாக உலகளாவிய ரீதியில் ஆசிரிய பயிற்சியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பின்வரும் 9 அத்தியாவசிய நுண்ணிலைக் கற்பித்தல் திறன்களில் ஆசிரிய மாணவர்கள் புலமை பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- டத்தை அறிமுகப்படுத்தும் திறன் (The Skill Of Introduction)
- விளக்கமளிக்கும் திறன் (The Skill Of Explaining)
- வினாக் கேட்கும் திறன் (The Skill Of Questioning)
- பல்வகை தூண்டல் திறன் (The Skill Of Stimulus Variation)
- மீளவலியுறுத்தல் திறன் (The Skill Of Reinforcement)
- தெளிவூட்டும் திறன் (The Skill Of Illustration)
- கரும்பலகையில் எழுதும் திறன் (The Skill Of Blackboard Writing)
- பாடத்தை முடிக்கும் திறன் (The Skill Of Achieving Closure)
- செய்முறைத் திறன் (The Skill Of Demonstration)
பாடத்தை அறிமுகப்படுத்தும் திறன்
(The Skill Of Introduction)
நுண்ணிலைக் கற்பித்தல் திறன் வகைகளின் பட்டியலில் முதலாவதாக பாடத்தை அறிமுகப்படுத்தும் திறன் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் அல்லது தலைப்பைக் கற்பிக்கத் தொடங்கும் முன் அவர்களுக்கு சிறந்த அறிமுகத்தை அளிக்கும் திறமையை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்தை நல்லபடியாக அறிமுகம் செய்தல் என்பது ஒரு திறமை. அது ஒரு கலை. இது மாணவர்களை பாடத்தின் பால் ஈர்ப்பதோடு, பாடத்திலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைச் சரியாகச் சொல்லவும் உதவும்.
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு அவர்கள் இன்று கற்கப்போகின்ற விடயங்கள் பற்றிய ஒரு சட்டகத்தை வழங்க வேண்டும். ஒரு தலைப்பு அல்லது பாடத்தை மாணவர்கள் புரிந்து கொள்வதை உறுதிசெய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.
அறிமுகத் திறனின் மூலம், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஆரம்பத்தில் இருந்தே பாடத்தில் ஈர்க்கவும் ஆர்வம் காட்டவும் சுவாரஸ்யமான அல்லது ஈர்க்கக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.
நல்ல அறிமுகம் இல்லாமல், ஆசிரியர்களால் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க முடியாது. ஒரு பாடத்தை அறிமுகப்படுத்த முயற்சிக்கும்போது மாணவர்களின் முந்தைய அறிவை மீட்டிப்பார்ப்பதும், சரியான சாதனத்தையும் பயன்படுத்துவதும், இடைநிறுத்தத்தைத் தவிர்ப்பதும் மற்றும் பொருத்தமற்ற கூற்றுக்களைத் தவிர்ப்பதும் முக்கியமானதாகும். பாடத்தை அறிமுகப்படுத்துவது, பாடம் எதைப் பற்றியது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்வதற்கு ஒரு சிறந்த வழி என்பதை ஆசிரியர் மறந்துவிடக் கூடாது.
பாடஅறிமுகத் திறனின் முக்கிய கூறுகள்
- மாணவர்களின் முந்தைய அறிவின் அதிகபட்ச பயன்பாடு.
- பொருத்தமான சாதனத்தைப் பயன்படுத்துதல்
- தொடர்ச்சியைப் பராமரித்தல்.
- வாய்மொழி அல்லது சொற்கள் அல்லாத நடத்தையின் பொருத்தம்
பாடத்தை அறிமுகம் செய்யும் போது பின்வரும் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்,
- புதிய பாடத்துடன் தொடர்புடைய கருத்துக்களைக் கூறித் தொடங்கலாம்
- விகாக்கேட்டு விடைகளை வரவழைத்து தொடங்கலாம்.
- விளக்குததல், வருணித்தல்,சொற்பொழிவு மூலம் தொடங்கலாம்.
- நடித்தல் முறை மூலம் தொடங்கலாம்.
- கதை கூறித் தொடங்கலாம்
- துணைச்சாதனங்களை பயன்படுத்தி தொடங்கலாம்.
- செய்து காட்டல் மூலம் தொடங்கலாம்
விளக்கமளிக்கும் திறன்
Skill of Explanation
நுண்ணிலைக் கற்பித்தல் திறன் என்று வரும்போது விளக்கமளிப்பதை நாம் ஒரு அறிவார்ந்த நடவடிக்கையாகவே கருதிப் பயன்படுத்தி வருகின்றோம். ஆம், விளக்கமளிக்கும் திறன் ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டிய அறிவுசார் செயல்பாடு ஆகும். நுண்ணிலைக் கற்பித்தலில் விளக்கும் திறன் என்பது ஒரு எண்ணக்கருவை, கொள்கையை அல்லது ஒரு சம்பவத்தைப் பற்றி மாணவரிடத்தில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் செயலாக வரையறுக்கப்படுகிறது.
ஒரு தலைப்பை நன்கு புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவவேண்டுமென்றால், எண்ணக்கருக்கள் வழிமுறைகள், சம்பவங்கள் மாணவர்களுக்கு நன்கு தெரிவிக்கப்பட வேண்டும். வெவ்வேறு சம்பவங்கள் மற்றும் யோசனைகளுக்கு இடையிலான உறவுகளை முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகளை வழங்க வேண்டும்.
ஓர் காரணியை ஏனைய காரணிகளோடு தொடர்புபடுத்த வேண்டும். விடயங்களை நன்றாக விளக்கக்கூடிய ஆசிரியர் தனது பாடத்தை வினைத்திறனாக நீண்டதூரம் கொண்டு செல்வார்.
விளக்கமளிக்கும் திறன் பின்வரும் உட்கூறுகளைக் கொண்டது.
- தொடங்கும் தொடர்
- இணைப்புச் சொற்கள்
- முற்றுவிக்கும் தொடர்
- விளக்குதலில் வினாக்கள்
வினாக்கேட்டல் திறன்
The Skill of Questioning
கேட்டல் என்பது ஓர் கலை. அது ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய மற்றொரு முக்கியமான நுண்ணிலைக் கற்பித்தல் திறனாகும். இது மாணவர்களுக்கு அர்த்தமுள்ள, பொருத்தமான, குறிப்பான, தெளிவான மற்றும் துல்லியமான வினாக்களைக் முன்வைக்க உதவும் ஒரு நுட்பமாகும். இது மாணவர்களின் புரிதலையும் அறிவையும் சோதிக்கப் பயன்படும் ஆசிரியரது திறன் எனலாம்.
வினாக் கேட்கும் திறனைப் பயன்படுத்துவதன் மூலம், ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவை மதிப்பிடலாம் மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் புரிந்துகொண்டார்களா என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைப் பெறலாம்.
மாணவர்களுக்குத் தலைப்புகளை விரைவாகப் புரியவைக்க, பல்வேறு கற்பித்தல் வழிகளை முயற்சிக்க ஆசிரியர்களுக்கு இது உதவுகிறது. வினாக்கேட்ட பிறகு, மாணவர்கள் ஒரு தலைப்பை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை ஒரு ஆசிரியர் உணர்ந்தால், அவர்கள் விடயங்களை எளிதாகப் புரிந்து கொள்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆசிரியர் கவனம் வெலுத்தலாம். வினாக்கேட்டலின் உட்கூறுகள் பின்வருமாறு,
- எளியநிலை வினாக்கள்
- இடைநிலை வினாக்கள்
- உயர் நிலை வினாக்கள்
- அறிவு நிலை வினாக்கள்
- கருத்துணரல் வினாக்கள்
- அறிவைப்பயன்படுத்தும் வினாக்கள்
- சிந்தனை வினாக்கள்
பல்வகை தூண்டல் திறன் (The Skill Of Stimulus Variation)
ஒரு ஆசிரியராக வெற்றிபெற நுண்ணிலைக் கற்பித்தல் திறன்கள் அவசியம். பல்வகை தூண்டல் திறன் என்பது கற்பித்தல் நடத்தையை மாற்றுவதன் மூலம் மாணவர்களை ஒரு தலைப்பு அல்லது பாடத்தில் ஈடுபட வைக்கப் பயன்படும் ஒரு கற்பித்தல் நுட்பமாகும். அதிகபட்ச பதிலுக்காக வகுப்பில் வெவ்வேறு தூண்டுதல்களைப் பயன்படுத்தி ஒரு மாணவரின் கவனத்தை ஈர்க்க இது பயன்படுகிறது.
டாக்டர் சினேகா ஜோஷியின் கூற்றுப்படி “தூண்டுதல் என்பது திசுக்களின் செயற்பாட்டு எதிர்வினையைத் தூண்டுகிறது. இது கற்பவர் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் கவனத்தைப் உயர் மட்டத்தில் பாதுகாப்பதற்கும் நிலை நிறுத்துவதற்கும் எதை மாற்றுவது, எப்போது மாற்றுவது, மற்றும் எப்படி மாற்றுவது என்பதில் ஆசிரியரின் திறமை அவசியம். அத்தகைய திறன் பல்வகை தூண்டல் திறன் என்று அழைக்கப்படுகிறது.
பல்வகை தூண்டல்னின் முக்கிய கூறுகள்
- நகர்வு
- மெய்பாட்டு அசைவு
- பேச்சு வடிவத்தில் மாற்றம்
- கவனத்தை ஈர்த்தல்
- தொடர்பு பாணியில் மாற்றம்
- புலன்மாற்றம்
- இடைநிறுத்தம்
- மாணவர்களின் தீவிர பங்கேற்பு
மீளவலியுறுத்தல் திறன்
The Skill Of Reinforcement
நுண்நிலக்கற்பித்தலில் மீளவலியுறுத்தல் திறன் என்பது மாணவர்களின் அதிகபட்ச பங்கேற்பை உறுதி செய்ய ஆசிரியர்களால் பயன்படுத்தப்படும் திறமையாகும். வகுப்பறை நடவடிக்கைகளில் மாணவர்களின் அதிக ஈடுபாட்டிற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய ஒருகருவியே மீளவலியுறுத்தலாகும்.
மீளவலியுறுத்தல் திறன் என்பது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை இனிமையாக்க, மென்மேலும் நேர்மறையான மீளவலியுறுத்தல்களைப் பயன்படுத்த வேண்டும்.
நேர்மறையான மீளவலியுறுத்தல்கள் என்பது மாணவர்களை ஊக்குவிக்கும், மற்றும் வகுப்பில் பங்கேற்பை ஊக்குவிக்கும் வார்த்தைகள் அல்லது சைகைகளாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு மாணவரின் பதிலுக்கு வாய்மொழியாகப் புகழ்வது அல்லது தலையசைப்பது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து மேலும் பதிலளிக்க அவர்களைத் தூண்டுகிறது. மாணவர்கள் சுறுசுறுப்பாக பங்கேற்கும் வகையில் ஒரு ஆசிரியர் நேர்மறை மீளவலியுறுத்தல்களை சீரான இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
எதிர்மறை மீளவலியுறுத்தல்கள், மறுபுறம், மாணவர்கள் வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் பங்கேற்பதையும் தடுக்கிறது. உங்கள் பாடசாலை நாட்களைப் பற்றி சிந்தியுங்கள். தவறான பதில் சொன்னதற்காக உங்கள் ஆசிரியர் உங்களை எல்லோர் முன்னிலையிலும் திட்டியபோது, நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? பரிதாபம் இல்லையா? எதிர்மறை மீளவலியுறுத்தலில் இதுவே நிகழ்கிறது.
மாணவர்களின் பதிலுக்காக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும்போது, அது அவர்களின் நம்பிக்கையை உடைத்து, மேலும் படிப்பதை நிறுத்துகிறது. ஒரு ஆசிரியர் முடிந்தவரை எதிர்மறை வலுவூட்டல்களைத் தவிர்க்க வேண்டும். மீளவலியுறுத்தல் எனும் இந்த ஒற்றை திறனால் கற்றல் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
நுண்ணிலைக் கற்பித்தலில் உள்ள மீளவலியுறுத்தல் திறன்
- சிறந்த கற்றலை ஊக்குவிக்கிறது
- மாணவர்களின் மன உறுதியை உயர்த்துகிறது
- அதிக வகுப்பறை பங்கேற்பை உறுதி செய்கிறது
- ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்துகிறது
நேர்மறை மீளவலியுறுத்தல் வகுப்பு வருகை அதிகரிப்பதற்கும், வகுப்பறை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்கும், உயர்ந்த ஒழுக்கம், உற்சாகம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமான கற்றல் சூழலுக்கும் வழிவகுக்கும்.
மீளவலியுறுத்தல் திறனிலுள்ள உட்திறன்கள் வருமாறு,
- திரும்பக் கூறுதல்
- மாணவர் கூறிய விடையை செம்மையாக்கிக் கூறுதல்
- மொழிச்சார்புடைய ஒலிமூலம் மீளவலியுறுத்துதல்
- சைகைகள் மூலம் மீளவலியுறுத்துததல்
தெளிவூட்டும் திறன் /எடுத்துக்காட்டுகளோடு விளக்கமளிக்கும் திறன்
(The Skill Of Illustration)
நாம் மேலே பார்த்த விளக்கும் தின் வேலை செய்யாதபோது நாம் இந்த தெளிவூட்டும் திறனைப் பயன்படுத்தலாம். அதாவது உதாரணங்களுடன் விளக்கலாம். ஒரு ஆசிரியர் தங்கள் மாணவர்களுக்கு விளக்கும் திறன் மூலமாக ஒரு கருத்தைப் புரிய வைக்கத் தவறினால், அவர்கள் தெளிவூட்டல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.
விளக்கப்படங்கள், எடுத்துக்காட்டுக்கள் மூலம், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை கற்பிக்கப்படும் யோசனைகள் மற்றும் கருத்துகளைப் புரிந்துகொள்ளவும், ஊக்குவிக்கவும் தூண்டவும் முடியும்.
ஒரு ஆசிரியர் ஒரு தலைப்பை மாணவர்கள் நன்கு புரிந்துகொள்ளக் கூடியவாறு விளக்குவதற்கு குறிப்பான மற்றும் தனிப்பட்ட எடுத்துக் காட்டுகளைப் பயன்படுத்தலாம்.
கரும்பலகையைப் பயன்படுத்தம் திறன்
The Skill Of Blackboard Writing
கரும்பலகையில் எழுதுவது, நுண்ணிலைக் கற்பித்தலில் உள்ள மற்றொரு இன்றியமையாத திறமையாகும். பாடத்தில் கவனத்தை குவிக்கவும், கவனத்தை ஈர்க்கவும், முக்கியமான சொற்கள் மற்றும் கருத்துகளை முன்னிலைப்படுத்தவும் இது பயன்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்க்க கரும்பலகையில் எழுதும் திறனைப் பயன்படுத்தலாம். கருத்துகளில் தெளிவு மற்றும் புரிதலை உருவாக்க ஆசிரியர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல நுட்பமாகும். இது ஒரு பாடத்தில் பல விடயங்களைச் சேர்க்க உதவுகிறது. இதன் உட்திறன்கள் பின்வருமாறு,
- தெளிவு
- புரியும் தன்மை
- முக்கிய கருத்துக்களை முன்னிலைப்படுத்துதல்
- பொருத்தப்பாடு
- கரும்பலகையின் சுருக்கம்
- மாணவர்களுடனான தொடர்
பாடத்தை முடிக்கும் திறன் – The Skill Of Achieving Closure
அறிமுகத்திறனைப் போலவே, நிறைவை அடையும் திறனும் அவசியம். ஒரு தலைப்பு அல்லது பாடத்தை அறிமுகப்படுத்துவது எளிதானது, ஆனால் ஒரு தலைப்புக்கு ஒரு நல்ல மூடலைக் கொடுப்பது சில நேரங்களில் தந்திரமானதாக இருக்கும். ஆசிரியர்கள் ஒரு தலைப்பை முறையாகவும் தெளிவாகவும் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் மாணவர்களுக்கு அதிக சுமை இல்லாமல் தலைப்பு அல்லது பாடத்தை நன்கு நினைவில் வைக்க உதவும் வகையில் போதுமான பணிகளை வழங்க வேண்டும். முடிக்கும் திறனின் உட் திறன்கள் வருமாறு,
- கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல்
- புதிய அறிவைப் பயன்படுத்த வாய்ப்பளித்தல்
- புதிய அறிவை முன்னறிவுடன் இணைத்தல்
- மேலதிக கற்றலுக்கு வாய்ப்பளித்தல்
செய்முறைத் திறன் (The Skill Of Demonstration)
கற்பித்தலில் நிரூபித்தல் என்பது மாணவர்களின் கற்றலை அர்த்தமுள்ளதாகவும் எளிமையாகவும் மாற்ற உதவுகிறது. சான்றாதாரங்களுடன் நிரூபித்தல் என்பது கற்றலை நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுடன் இணைக்க உதவுவதாகும். இது கொள்கைகள், எண்ணக்கருக்கள் மற்றும் யோசனைகளை மாணவர்களுக்கு சாதனங்கள், பரிசோதனைகள் அல்லது மாதிரிகளைக் காண்பிப்பதன் மூலம் நிரூபிப்பதாகும். இது வகுப்பறையில் ஒரு கலகலப்பான சூழலை உருவாக்க உதவுகிறது.
நுண்ணிலைக் கற்பித்தலில் நிரூபிக்கும் திறன் சரியாக திட்டமிடப்பட்டிருப்பது முக்கியம். நுண்ணிலைக் கற்பித்தலில் உள்ள நிரூபிக்கும் திறனைக் காட்டவும் மற்றும் கருத்துக்களைப் பெறவும், ஆசிரியர் முதலில் ஒரு விரிவான பாடக்குறிப்பைத் தயாரிக்க வேண்டும், அதே நேரத்தில் சரியான முறையில் நிரூபிக்கக்கூடிய ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாடக்குறிப்பில் கற்பித்தல் விளக்க உதாரணங்களைச் சேர்ப்பது கட்டாயமாகும். நுண்ணிலைக் கற்பித்தல் நிரூபித்தல் திறன் ஆறு படிகளை உள்ளடக்கியது:
- திட்டமிடல் மற்றும் தயாரிப்பு
- பாடவிடயத்தை அறிமுகப்படுத்துதல்
- பாடவிடயத்தை வழங்குதல்
- ஆதாரங்களுடன் நிரூபித்தல்
- கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்துதல்
- முடிந்தவுடன் நிரூபித்தலை மதிப்பீடு செய்தல்.
நுண்ணிலை கற்பித்தல் சுழற்சி – Micro teaching Cycle
நுண்ணிலை கற்பித்தல் சுழற்சியில் 6 படிகள் உள்ளன. சிறந்த நுண்ணிய கற்பித்தல் சுழற்சி 36 நிமிடங்கள் ஆகும், இதில் கற்பித்தல் சுமார் 6 நிமிடங்கள், பின்னூட்டம் 6 நிமிடங்கள், மறு திட்டமிடல் 12 நிமிடங்கள், மீண்டும் கற்பித்தல் 6 நிமிடங்கள் மற்றும் மறு பின்னூட்டம் 6 நிமிடங்கள் ஆகும்.
- திட்டமிடல்: (Planning)
இதில் கற்பித்தல் திறன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் உட்கூறுகள் அறியப்படுகின்றன. ஒரு பாடவிடயத்தினைக் கொண்டு, திறனை வெளிப்படுத்தும் வகையில் குறு-பாடத்திட்டமாக பாடநிகழ்வு தயாரிக்கப்படுகிறது.
- கற்பித்தல்: (Teaching)
இதில் பயிற்சி ஆசிரியர் பாடவிடயத்தினை, கற்பிக்கும் திறனை பயன்படுத்தி, 5 முதல் 10 மாணவர்களுக்கு, 5 முதல் 10 நிமிடங்களில் கற்பிக்கிறார். அவதானிப்பாளர் மூலம், மதிப்பீடுகள் உட்கூறுகளின் அடிப்படையில், ஓர் அட்டவணையில் குறிக்கப்படுகிறது. மேலும் கற்பித்தல் செயல்முறை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
- பின்னூட்டம்: (Feedback)
மேற்பார்வையாளர் அல்லது அவதானிப்பு ஆசிரியர் மதிப்பீடுகளைக் கொண்டு பின்னூட்டம் அளிக்கிறார். திறன் திருப்தியாக கையாளப்பட வில்லை எனில் மறுதிட்டமிடலுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- மறுதிட்டமிடல்: (Re-planning)
அதே பாடக்கருத்து மற்றும் திறனைக் கொண்டு, பின்னூட்டத்திற்கு ஏற்ப குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் பாடநிகழ்வு அமைக்கப்படுகிறது.
- மறுகற்பித்தல்: (Re-teaching)
திருத்திய தயாரிப்புகளுடன் வேறொரு ஒப்பிடக்கூடிய மாணவக்குழுவிற்கு கற்பிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
- மறுபின்னூட்டம்: (Re-feedback )
மறுகற்பித்தலை விமர்சித்து மறுபின்னூட்டம் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் கற்பிக்கும் திறனில் சிறந்தோங்கும் வரை இந்த சுழற்சி தொடர்கிறது.
நுண்ணிலைக் கற்பித்தல் எதிர் வகுப்புக் கற்பித்தல் – Micro-teaching vs classroom teaching
நுண்ணிலைக் கற்பித்தல்
- இது ஒரு ஆசிரியர் பயிற்சி நுட்பம்.
- வகுப்பு அளவு 05 முதல் 10 மாணவர்கள்.
- வகுப்பின் கால அளவு 05 முதல் 10 நிமிடங்கள்.
- ஒன்று அல்லது இரண்டுகற்பித்தல் திறன் பயன்படுத்தப்படும்.
- திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- ஆசிரியர் அவதானிப்புக்கு உட்படுத்தப்படுகின்றார்.
- ஆசிரியரின் எல்லாத் தவறுகளும் அவதானிக்கப்படுகின்றது.
- கற்பித்தலுக்கான பின்னூட்டம் வழங்கப்படுகின்றது.
- பாடத்தை மீண்டும் கற்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
- மாணவர்களின் தேவைகள் முக்கியம் பெறுவதில்லை.
- மாணவர்களுக்கான வகுப்பறைச் செயற்பாடுகள் அளிக்கப் படுவதில்லை.
- ஆசிரியரின் படைப்பாற்றல் திறன் குறைகின்றது.
- கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மட்டுமே நுண்ணிலைக் கற்பித்தல் வெற்றியடையும்.
- கற்பித்தல் ஒப்பீட்டளவில் எளிமையானது.
- பல்வேறு உணரக்கூடிய வளங்கள் மற்றும் பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்படும்
வகுப்புக் கற்பித்தல்
- வகுப்பறைக் கற்பித்தலாகும்
- வகுப்பு அளவு 30 முதல் 40 மாணவர்கள்.
- வகுப்பின் கால அளவு 30 முதல் 40 நிமிடங்கள்.
- அதிகளவு கற்பித்தல் திறன்கள் பயன்படுத்தப்படும்
- பாடவிடயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
- ஆசிரியரை அவதானிக்கும் ஏற்பாடுகள் இல்லை
- ஆசிரியரின் தவறுகளைக் கண்காணிக்கும் ஏற்பாடுகள் இல்லை.
- கற்பித்தலுக்கான பின்னூட்டம் வழங்கப்படவதில்லை.
- பாடத்தை மீண்டும் கற்பிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை
- மாணவர்களின் தேவைகளுக்கு முக்கியம் அளிக்கப்படுகின்றது.
- மாணவர்களுக்கான வகுப்பறைச் செயற்பாடுகள் அளிக்கப் அளிக்கப்படுகின்றது.
- ஆசிரியரின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கின்றது
- எந்தச் சூழ்நிலையிலும் வகுப்புக் கற்பித்தல் வெற்றியடையும்.
- கற்பித்தல் ஒப்பீட்டளவில் சிக்கலானது.
- கேட்டல் மற்றும் நினைவுபடுத்துதல் மூலம் நடைபெறுகிறது.
நுண்ணிலை கற்பித்தலின் நன்மை தீமைகள் (Pros and Cons of Micro Teaching)
எந்தவொரு கருத்தும் எவ்வளவு சாதகமாகத் தோன்றினாலும், அது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தின் நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், அதில் சில குறைபாடுகள் எப்போதும் இருக்கும். நுண்ணிலைக் கற்பித்தலின் இத்தகைய நன்மைகள் மற்றும் தீமைகள் கீழே குறிப்பிடப்படுகின்றன. இது நுண்ணிய கற்பித்தல் பற்றிய கருத்தை கற்பவர்களின் மனதில் தெளிவாக்குகிறது.
நுண்ணிலைக் கற்பித்தலின் நன்மைகள் (Pros of Micro Teaching)
நுண்ணிலைக் கற்பித்தல், எங்கு செயல்படுத்தப்பட்டாலும், ஆசிரியர்கள் மற்றும் செயல்பாட்டில் பங்கேற்ற மாணவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட நேர்மறையான தாக்கத்தை எப்போதும் உருவாக்கியுள்ளது, அவை பின்வருமாறு,
- நுண்-கற்பித்தல் ஒரு சிறிய அளவில் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மிகவும் செலவு குறைந்ததாகும்.
- ஆசிரிய மாணவர்களால் முறையான பாடத் திட்டங்களை உருவாக்க உதவுகிறது..
- ஒரு ஆசிரியர் திறம்படக் கற்பிக்கத் தவறினால் நுண்கற்பித்தல் மாணவர்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஆசிரியர்கள் தங்களை முன்கூட்டியே நன்கு தயார்படுத்திக் கொள்ளவும், உண்மையான வகுப்பறையை எதிர்கொள்ளத் தயாராகவும் உதவுகிறது.
- இது சிறந்த முடிவுகளை அடைய ஆசிரியர்களிடையே நேர்மறையான அணுகுமுறையை ஏற்படுத்துகிறது.
- நுண்-கற்பித்தல் திறன் பயிற்சி மூலம், ஆசிரியர்கள் உண்மையான கற்பித்தல் உலகிற்குள் நுழைவதற்கு முன் அதிக நம்பிக்கையுடனும் திறமையுடனும் இருக்க கற்றுக்கொள்கிறார்கள்.
- நுண்-கற்பித்தல் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அதாவது 4-5 பேர் மீது கவனம் செலுத்துகிறது, எனவே ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
- நுண் கற்பித்தல் ஆசிரியர்களுக்கான ஆளுமை மேம்பாட்டுக் கருவியாகச் செயல்படுகிறது.
- புதிய திறன்களில் பயிற்சி பெறவும், குறிப்பிட்ட திறனில் சிறந்தோங்கவும் உதவுகிறது.
- இதன் மூலம் ஆசிரியருக்கு தன்னம்பிக்கை வளர்கிறது.
- உடனடி பின்னூட்டம் / விமர்சனம் அளிக்கப்படுகிறது.
- கற்பித்தல் தொடர்பான ஆய்வுக்குப் பயன்படுகிறது.
நுண்ணிலைக் கற்பித்தலின் குறைபாடுகள்: Cons of Micro Teaching
- உண்மையான வகுப்பு உணர்வு இல்லாததால் மாணவர்களைக் கையாள்வதில் தனிப்பயனாக்கம் இல்லை.
- இது பொதுவாக ஆசிரியருடன் மாணவர்களின் சமூக-உணர்ச்சி வளர்ச்சியைக் கவனிக்காது.
- ஆசிரியரின் உண்மையான திறனை மதிப்பிடுவதற்கு கால அளவு போதுமானதாக இருக்காது.
- இந்த முறை மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும்.
- கற்பித்தலின் ஒட்டுமொத்த சூழலை பொருட்படுத்தவில்லை.
- பாடவிய அடிப்படையில் அமையாமல் திறன் அடிப்படையிலான பயிற்சியாக உள்ளது.
- பயிற்று நிறுவனங்களில் நுண்ணிலை கற்பித்தல் ஆய்வகம் விலையுயர்ந்தது.
இறுதியாக,
நுண்ணிலைக் கற்பித்தல் ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைத் திறம்படச் செய்வதற்குப் பயிற்சி பெற்றவர்களா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. அவை ஆசிரியர்களுக்கு நிஜ வாழ்க்கை வகுப்பறை கற்பித்தலில் ஆர்வத்தை அதிகரிக்க வழங்கப்படும் ஆளுமை மேம்பாட்டு பயிற்சியின் பிரதி எனலாம். நுண்ணிலைக் கற்பித்தலில் கற்பித்தல் திறன் ஆசிரியர்களுக்கு தன்னம்பிக்கை, பேச்சு பண்பேற்றம் மற்றும் வெளிப்படுத்தும் திறன்களை வளர்க்க உதவுகிறது. அவர்கள் நேர முகாமைத்துவத்தைக் கற்றுக் கொள்கிறார்கள், உடல் மொழியை மேம்படுத்துகிறார்கள், நேர்மறை மனப்பான்மையைக் கற்கிறார்கள், மற்றும் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்துகிறார்கள், இது கற்பித்தலை ஒரு வாண்மைத்துவமாக எடுத்துக் கொள்ளும்போது மிகவும் முக்கியமானது.
References
- Mathew, T.K. & Molukutty, T.A. (2010). Science Education: Theoretical Bases of Teaching & Pedagogic Analysis, Rainbow Book Publishers, Thiruvananthapuram.
- Mohan, R. (2013). Innovative Science Teaching, Prentice Hall of India, New Delhi.
- Sivarajan, K. & Faziluddin, A. (2009). Science Education: Methodology of Teaching and Pedagogic Analysis, Central Co-operative Stores, Calicut University.
- Manoj Praveen, G. & Hassan Koya, M.P. (2016). Teaching Science: Resources Methods and Practices, Neelkamal, Publications, New Del
- Jagadish Prasad Sharma (2009), Teacher Education, Centrum Press, New Delhi.
- Allen DW, Ryan K. Massachusetts: Addison-Wesley; 1969.