மலையக சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் தொழில் வழிகாட்டல் தேவையின் அவசியம்

மலையக சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் தொழில் வழிகாட்டல் தேவையின் அவசியம்
ஒரு சமூகம் வளர்ச்சி அடைந்த சமூகமாக மாற வேண்டுமாயின் கட்டாயம் அந்த சமூகத்தில் கல்வி சிறந்த முறையில் வளர்ச்சி அடைய வேண்டும். கல்வியில் உயர்வடையும்போது அந்த சமூகம், அரசியல், பொருளாதாரம,; கலை கலாசார பண்பாட்டு ரீதியாக உயர்வடைந்த சமூகமாக மாற்றமடையும். இலங்கை வரலாற்றில் இந்தியாவிலிருந்து மலையகத் தோட்டப்புறங்களை நோக்கி வேலைகளுக்காக பிரித்தானிய காலனித்துவ காலத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களாக இலங்கை மலையகச் சமூகம் காணப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையில் 1945 ஆம் ஆண்டு இலவச கல்விமுறை அறிமுகம் செய்தாலும். அதனை அனுபவிக்கும் பாக்கியத்தினை முப்பது வருடங்களுக்குப் பின்னரே இம் மலையக மக்களுக்கு கிடைத்தது. அதன் பின்னர் மலையகத்தில் ஓரளவு கல்வி முன்னேற்றம் அடைவதைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மலையக கல்வியின் அடித்தளமாக நான் நோக்கம் பொழுது பிரித்தானியர்களின் மிஷனரிமார்களின் பங்களிப்புடன் ஆரம்பமாகி பின்னர் தோட்ட பாடசாலைகளாக உருவம் பெற்றதுடன் அதன் வளர்ச்சி போக்கு சற்று அதிகமாக காணப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று மலையக சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு முறையாக தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்காமையினால் பாடசாலை கல்வியை முடித்த திறமையான மாணவர்கள் தமது உரிய தொழிலினை பெற்றுக் கொள்ள தவறுகின்றனர். இதற்கு முறையான வழிகாட்டல் ஆலோசனை இன்மையும் பல இடங்களில் மலையகமானவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோவதனையும் நாம் நோக்க முடியும்.
பொதுவாக நாம் பாடசாலையினை எடுத்து நோக்கும் பொழுது இடைநிலை கல்வி என்பது பாரிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய பிரிவாகும். இப் பிரிவினரை கட்டிளமை பருவத்தினர் எனவும் கூறலாம். அதாவது இப்பருவத்தினர் எதையும் செய்து பார்க்கும் பருவம் கொண்டவர்களாக காணப்படுவர். பொதுவாக பாடசாலையில் இடைநிலை மாணவர்களை சிரேஷ்ட இடைநிலை மாணவர்கள், கனிஷ்;ட இடைநிலை மாணவர்கள் என்று பிரிப்பர். இதில் சிரேஷ்ட இடைநிலை மாணவர்கள் என்பது தரம் 10 தொடக்கம் 13 வரையான மாணவர்களை குறிக்கும். இவ் சிரேஷ்ட இடைநிலை மாணவர்கள் அடுத்து வரும் சமூகத்திற்கு முகம் கொடுக்கக் கூடிய மாணவர்களாக காணப்படுவதனால் அவர்களுக்கு முறையான தொழில் வழிகாட்டலினை வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் இன்று பாடசாலை மட்டங்களில் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை மிகவும் அவசியமானது ஒன்றாக காணப்படுகின்றது.
தொழில் வழிகாட்டல் என்பது தொழிலை விரும்புவோருக்கு அறிவு, திறன், அனுபவம் என்பவற்றினை சமூகத்தினுள் பெற்றுக் கொள்ளக்கூடிய வெற்றி தொடர்பான வழிகாட்டல் என்று கூற முடியும். அதேபோன்று யுனெஸ்கோவால் வெளியிடப்பட்ட 21 ஆம் நூற்றாண்டுக்கான தொழில் வழிகாட்டல் முறைகள் எனும் நூலில் வழிகாட்டல் என்பது கற்பவர்களுக்கு தொழிலை மையப்படுத்திய இலக்கினை அடைய கல்வி பயிற்சி மற்றும் திறன் விருத்தி தொழில் விருத்தி மேலாதிக்க பயிற்சி வான்மைத்துவம் என்பவற்றுக்கான வழிகாட்டல் என குறிப்பிடப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் என்றவகையில் பிள்ளைகள் பாடசாலை விட்டு விலகும் போது அவர்களின் திறன்களுக்கு ஏற்ப பொருத்தமான தொழிலை தெரிவு செய்வதற்கும் வழிப்படுத்துவதற்கும் பாடசாலையில் வழிகாட்டல் சேவை அவசியமாகும். குறிப்பாக இன்றைய உலகில் மாணவர்கள் மத்தியில் தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம் மிகவும் பரவலாக பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. ஒரு பிள்ளை ஆரம்பத்தில் குழந்தையாக பிறக்கும் போது அவர்களுக்கு உரிய ஆரம்ப வழிகாட்டியாக பெற்றோர்கள் காணப்படுகின்றனர். அதன் பிற்பாடு பிள்ளை கல்வி சமூகத்தினை அணுகுகின்றது. அதாவது ஆரம்பக் கல்வியில் காலடி எடுத்து வைக்கின்றது. இதன் பின்னர் அப்பிள்ளைக்குரிய வழிகாட்டியாக பெற்றோர்களுடன் இணைந்து ஆசிரியர்களும் கானப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் பிள்ளைக்கல்வி வழிகாட்டலின் ஊடாகவே அறிவு ரீதியான பல விடயங்களை கற்றுக் கொள்கின்றது. அத்தோடு கல்வியின் மூலம் பல படிகளை தாண்டிச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தோடு முன்னோக்கி செல்கின்றது. இவ்வாறு பாடசாலை கல்வி முடிவுற்றதும் பிள்ளை தொழிலுக்கு செல்வதற்காக தன்னை தயார்படுத்துகின்றது. இந்த வேலையில் தான் பிள்ளைக்குரிய வழிகாட்டல் ஆக தொழில் வழிகாட்டல் மிகவும் பிரதான ஒன்றாக காணப்படுகின்றது.
வேலை உலகிற்கு பிரவேசம் என்பது தொழில் ஒன்றினை பெறுவதற்காக தன்னை தயார் படுத்தி தனது தேவைகளை பூர்த்தி செய்வதாகும். வேலை உலகிற்குள் தயாராக வேண்டுமானின் நம்மை முழுமையாக நாமே தயார் படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக படிப்புகள் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு என்ன பல துறைகளில் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் இறுதியில் தொழில் என்ற விடயத்திற்குள் செல்ல வேண்டும். அதன் அடிப்படையில் இன்றைய நவீன சூழலுக்கு ஏற்ற வகையில் இதற்கு முகம் கொடுக்கும் வகையில் தமது தொழில்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறாயின் எவ்வாறு வேலை உலகிற்கு செல்லலாம்? அதற்கான கல்வி மற்றும் தொழில் தகமைகள் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்? எதிர்காலத்தில் தொழில் பரிமாற்றத்தினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும். என்பது தொடர்பான விடயங்கள் அறிந்திருத்தல் அவசியமான ஒன்றாகும். இலங்கை கல்வி முறையினை நாம் நோக்கும் பொழுது அவை இரண்டு விதங்களில் காணப்படுகின்றது. முதலாவது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியாகும். பாடசாலையில் மாணவர்கள் சித்தி பெற்றதுடன் பல்கலைக்கழகம், கல்வியற் கல்லூரி ஏனைய உயர்கல்வி நிறுவனங்களின் ஊடாக பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு போன்றவற்றைப் பூர்த்தி செய்து தொழில் உலகுக்குள் நுழைவது ஆகும். இதில் அநேகமான எதிர்பார்ப்பு அரச தொழிலை மையமாகக் கொண்டு காணப்படுகின்றது. இரண்டாவது தொழில் கல்வி முறையாகும் இது பாடசாலை கல்வினை பூர்த்தி செய்தவர்கள் இடை விலகியவர்கள் தேசியத் தொழில் தகவல் ஊடாக தங்களது தகைமைகளை பூர்த்தி செய்து வேலை உலகிற்கு செல்வதாகும்.
இவற்றினை அடிப்படையாகக் கொண்டு எந்த துறைகளை தெரிவு செய்ய வேண்டும்? உங்களுக்குள் இருக்கின்ற திறமை என்ன? ஆளுமையின் பங்கு எவ்வாறு இருக்கின்றது? எதிர்கால வேலை உலகிற்கு ஏற்றவாறு எந்த தொழிலினை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற விடயங்ககளை சிரேஷ்ட இடைநிலை மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்படுவதன் ஊடாக மட்டுமே எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த தொழிலை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்க முடியும்.
அந்த வகையில் மலையக பாடசாலைகளில் காணப்படும் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் தேவை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. மலையக மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் மட்டுமன்றி, தொழில் கல்வியினை பெற்றுகொள்வதிலும் பின்தங்கியே காணப்படுகின்றனர். அதாவது, பல்வேறுபட்ட தொழில்களை செய்வதற்குத் தேவைப்படும் அடிப்படை வினைத்திறன்கள் அவர்களிடையே இல்லாதிருக்கின்றது
முதலாவதாக, மலையக மாணவர்கள் தொழில்நுட்ப, தொழில்சார்கல்யை பெற்று கொள்வதில் தடையான இருக்கும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் போதனையை மலையகப் பாடசாலைகளில் மேம்படுத்த வேண்டுவதோடு மட்டுமல்லாமல் சிரேஸ்ட இடைநிலை மாணவர்கள் மத்தியில் அதன் முக்கியத்துவத்தினை தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் தொழில்கல்வி, தொழில்சார்கல்வி என்பனவற்றை பெற்றுக்கொள்வதிலும் மலையக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இன்றியமையாதது.
எனவே சிரேஸ்ட இடைநிலையை பொறுத்த மட்டில் சில தெரிவு பாடங்கள் தொழில் கல்வியை மையப்படுத்தி காணப்படுகின்றது. 2007, 2015ஆம் ஆண்டு கலைத்திட்ட மறுசீரமைப்பில் 2023 ஆம் ஆண்டு கல்விக்கொள்கை முன்மொழிவுகளிலும் தொழில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. உதாரணமாக, தரம் 6 தொடக்கம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு அண்மையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ஐஊவு)பாடம்அறிமுகம் செய்யப்பட்டது, தரம் 10 தொடக்கம் 11 வகுப்பு தெரிவு பாடங்களில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாடம் கொண்டு காணப்படுகின்றது, தொழில் கல்விக்கு தேவையான பிற மொழி கல்விகளை தெரிவு பாடங்களில் உட்புகுத்தி அதனை அறிமுகம் செய்தனர். குறிப்பாக தரம் 10,11 வகுப்புகளில் முதலாம் பாட தெரிவுக்குள் பாளி, பிரென்ச், சமஸ்கிரதம்,ஜெர்மன,; ஹிந்தி,ஜப்பான்,அரபு கொரியன் போன்ற மொழிகளை கற்க வாய்ப்பளித்தனர் இதேபோன்று அண்மைக்காலத்தில் உயர்தரப் கலைப் பிரிவில் கொரிய மொழியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தினார்கள். இதன் மூலம் வெளிநாட்டு தொழில் சந்தையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இலங்கையின் கல்வி சீர்திருத்தம் அமையப்பெற்றுள்ளது, தரம் 10 ,11 மூன்றாம் தெரிவு பாட தொகுதியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், விவசாயமும் உணவு தொழிநுட்பமும், நீர் உயிரின தொழில்நுட்பவியல், நுண்கலை, மனைப்பொருளியல், தொடர்பாடலும் ஊடக கற்கையும், வடிவமைப்பும், நிறுவனமும் தொழில்நுட்பமும், வடிவமைப்பும் இயந்திர தொழில்நுட்பவியலும், வடிவமைப்பும் மின் இயந்திரனியல் தொழிநுட்பம் போன்ற தொழில் கல்விக்கு ஏற்ற வகையில் இலங்கையின் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தரம் 12, 13 வகுப்புகளில் தொழிசார் பாதுகாப்பு கருதி சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் இடைவிலகிய மாணவர்கள் தொழில் ரீதியில் தனது கல்வித் தகமை பெற்றுக்கொள்வதற்காக 13 வருட உத்தரவாத கல்வி என்ற அடிப்படையில் 2016 இல் தொழில்சார் பாடங்களை அறிமுகப்படுத்தியது. தரம்-13 பூர்த்தி செய்யும்போது தெரிவுசெய்யப்பட்ட தொழில் குறித்த திறன்களை அடைவதற்கு வழிவகுக்கும் வகையில் இப் புதிய பாடத் துறைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இது தொடர்பான போதியளவான அறிவு மலையக சிரேஸ்ட இடைநிலை மாணவர்களுக்கு இல்லை எனவே இது தொடர்பான விளிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதே போன்று ஆசிரியர்கள் மத்தியிலும் இது தொடர்பான ஒரு பூரணத்துவமான தெளிவின்மையும் காணப்படுவதால் அவர்களுக்கும் ஒரு தெளிவான வழிகாட்டல் ஆலோசனையை வழங்குவதோடு அவர்களை கொண்டு மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் பாடசாலை கல்வி மட்டுமல்லாமல் பாடசாலையில் இருந்து இடைவிலகிய பின்பும் எவ்வாறு தனது தொழில் கல்வியை விருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக வழிகாட்டல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக இலங்கையில் தொழில் கவ்வியை வழங்கும் நிறுவனங்ளாவன
- தொழிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்.
- தொழிநுட்பவியல் கல்லூரி
- தொழிநுட்ப கல்லூரி
- தொழில் பயிற்சி அதிகார சபை
- தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை.
- இலங்கை ஜேர்மன் தொழிட்ப்ப பயிற்சி நிறுவனம்..
- அமைச்சின் கீழுள்ள தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள்.
- வாழ்க்கை தொழில்சார் தொழிநுட்பவியல் பல்கலைக்கழகம்.
- சமூத்திரவியல் பல்கலைக்கழகம்.
- வணிக மேலாண்மை தேசிய நிறுவனம்
போன்வற்ற தொழில் கல்வி நிறுவனங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான பூரண விளக்கத்தினை சிரேஸ்ட இடைநிலை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
அரச பல்கலைக்கழகங்களில் தற்பொழுது தொழில் கல்விக்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உணவு விஞ்ஞானமும் போசாக்கும், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும,; தொடர்பாடல் கற்கைகள,; சுற்றுலாவும் விருந்தோம்பல் கற்கையும், பசுமை தொழில் நுட்பம் தொழில் முயற்சியாமையும், முகாமைத்துவமும் தேயிலையும் தொழில்நுட்பமும், கனிய வளங்கள் தொழிநுட்பம், நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம்,கடல்சார், மற்றும் நன்னீர் விஞ்ஞானம் போன்ற புதிய கற்கைகள் மற்றும் பீடங்கள் அண்மையில் இலங்கையின் சில அரச பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது இதனூடாக தொழில் வாய்ப்புக்கு ஏற்றதாக வகையில் கலைத்திட்டம் அமைக்கப்பட்டதுடன் இது தொடர்பாகவும் மாணவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் மலையக மாணவர்கள் தொழில் ரீதியான கற்கை நெறியை கற்பதற்கு பல சவால்களும் காணப்படுகின்றன. குறிப்பாக போக்குவரத்து பிரச்சினை, பொருளாதார சிக்கல்கள் என்பதோடு நகரங்களை அண்டியப்பகுதிகளிலே தொழிநுட்ப கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றன. அதிலும் சிங்கள மொழி மூலமே அதிகமான பாடங்கள் கற்பிக்கப்படுவதால் மலையக மாணவர்கள் அதனை பெற்றுகொள்வதில் பல சிக்கல்களும் காணப்படுகின்றன. இருப்பினும் தொழில்நுட்ப்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு மற்றும் சில புலமைப் பரிசில் திட்டங்கள், மாதாந்த பிரயான சீட்டு கொடுப்பனவு போன்றவை மாணவர்களின் நலன்கள் கருதி வழங்கப்படுகின்றன.
மேற்படி மலையக சிரேஸ்ட இடைநிலை மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் மட்டுமன்றி தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி என்பவற்றிலும் முன்னேற்றமடைவதன் மூலமே சிறந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அவர்கள் கட்டாயமாகவே இத்துறைகளில் முன்னேற்றமடைவது சமூக முன்னேற்றத்திற்கும் அவர்களது சுயமுன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகும். எனவே அவர்களை முறையாக வழிபடுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள் கைகளிலே உள்ளது.
தே.ஜீவன் பிரசாந்த்
கல்வியியல் சிறப்பு கற்க்கை மாணவன்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.