கட்டுரை

வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள்

வினைத்திறனான பாடத்திட்டமிடலுக்கான மூலோபாயங்கள்

Strategies for Effective Lesson Planning

S.Logarajah, Lecturer,

Batticaloa National College of Education

loga

ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்கான செயற்பாட்டுத் திட்டம் என்பது மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், அதை குறித்த பாடவேளையில் வகுப்பில் எவ்வாறு திறம்பட நடைமுறைப்படுத்தவது என்பது பற்றிய ஆசிரியரின் பாதை வரைபடமாகும். (Road map)

நாம்  பாடத்தைத் திட்டமிடுவதற்கு முன், குறித்த பாடத்திற்கான கற்றல் குறிக்கோள்களை   முதலில் அடையாளம் காண வேண்டும். பின்னர்,  பொருத்தமான கற்றல் செயற்பாடுகளை வடிவமைப்பதோடு மாணவரர்களின் பின்னனூட்டலைப் பெறுவதற்குரிய உத்திகளை உருவாக்கலாம். ஒரு வெற்றிகரமான பாடத் திட்டம் பின்வரும் மூன்று முக்கிய கூறுகளைக் குறிப்பிடுகிறது மற்றும் ஒருங்கிணைக்கிறது:

  • மாணவர்களின் கற்றலுக்கான குறிக்கோள்கள்
  • கற்பித்தல் /கற்றல் நடவடிக்கைகள்
  • மாணவர்களின் புரிதலை சரிபார்ப்பதற்கான உத்திகள்

மாணவரின் கற்றலுக்கான குறிப்பிட்ட குறிக்கோள்களைக் குறிப்பிடுவதானது,  வகுப்பில் நாம் பயன்படுத்தும் கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகள் கற்றல் கற்பித்தல் முறைகள்களின் வகைகளைத் தீர்மானிக்கவும், அந்தச் செயல்பாடுகள் கற்றல் நோக்கங்களைப் பூர்த்தி செய்ததா என்பதை எவ்வாறு அளவிடலாம் என்பதை வரையறுக்கவும் உதவும்.

  1. கற்றல் குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்டுவோம்.

வகுப்பின் முடிவில்  அதாவது குறித்த பாடத்தைக் கற்ற பின்னர் மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களால்  எவற்றைச் செய்யக் கூடியதாக இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது முதல் படியாகும். எமது குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்ட பின்வரும் வினாக்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

  • பாடத்தின் தலைப்பு என்ன?
  • மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்?
  • வகுப்பின் (பாடத்தின்) முடிவில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியவை எவையென என்று நான் விரும்புகிறேன்?
  • இந்தக் குறிப்பிட்ட பாடத்திலிருந்து அவர்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்?

குறித்த பாடவேளைக்கான கற்றல் குறிக்கோள்களை நாம் கோடிட்டுக் காட்டியவுடன், அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்த வேண்டும்.

இந்த வரிசைப்படுத்தல்  நேரத்தை முகாமை செய்வதற்கும்,  முக்கியமான கற்றல் செயற்பாடுகளை  நிறைவேற்றுவதற்கும் எம்மைத் தயார்படுத்தும். பின்வரும் வினாக்களை நோக்குவோம்,

  • மாணவர்கள் புரிந்துகொள்ளவும் பிரயோகிக்கவும் தேவையானவை என நான் விரும்பும் மிக முக்கியமான கருத்துக்கள், ஆலோசனைகள் அல்லது திறன்கள் யாவை?
  • அவை ஏன் முக்கியம்?
  • குறிப்பிட்ட நேரத்திற்குள் எவற்றைத் தவிர்க்க முடியாது? எவற்றை நான் தவிர்க்கலாம்?
  1. அறிமுகத்தை கட்டியெழுப்புவோம்.

நாம் கற்றல் குறிக்கோள்களை அவற்றின்  முக்கியத்துவத்தின் அடிப்படையில்  வரிசைப்படுத்திய பின்பு, மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் உதவும் விசேட கற்றல் செயல்பாடுகளைத் கட்டியெழுப்ப வேண்டும். ஏனென்றால் நமது வகுப்பில்  பல்வேறு வகையான.  பலதரப்பட்ட  கல்வி மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைக் கொண்ட மாணவர்கள் இருப்பர். அவர்கள் ஏற்கனவே விடயத் தலைப்பை நன்கு அறிந்திருக்கலாம். அதனால், பாடத்தைப் பற்றிய மாணவர்களின் முன்னறிவை அல்லது அதைப் பற்றிய அவர்களின் முன்கூட்டிய கருத்துக்களை அளவிடுவதற்கு நாம் ஒரு வினா அல்லது செயற்பாட்டுடன் பாடத்தை  தொடங்கலாம்.

உதாரணத்திற்கு,

நாம் ஒரு எளிய கருத்துக்கணிப்பை மேற்கொள்ளலாம், “எத்தனை பேர் உலகப் போர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? தெரிந்தால்  கையை உயர்த்துங்கள்.” எனக் கேட்கலாம்  அது குறித்து கேள்விப்பட்டவற்றை கூறுமாறு அல்லது எழுதுமாறு கேட்கலாம். அதன் மூலம்  மாணவர்களிடமிருந்து அவர்களது வகுப்பிற்கு முந்தைய பின்னணித் தகவல்களைச்  சேகரிக்கலாம். இந்த கூடுதல் தகவல் நமது அறிமுகம், கற்றல் நடவடிக்கைகள் போன்றவற்றை வடிவமைக்க உதவும். விடயத் தலைப்பில் மாணவர்களின் பரிச்சயத்தைப் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருக்கும்போது, ​​எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற உணர்வும் நமக்கு இருக்கும்.

மாணவர்களது ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், சிந்தனையைக் கிளறுவதற்கும்  ஏற்ற வகையில் ஆக்கப்பூர்வமான பாட அறிமுகத்தை நாம் உருவாக்க வேண்டும். மாணவர்களை ஈடுபடுத்த நீங்கள் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம்

உதாரணமாக

  • தனிப்பட்ட நிகழ்வு. (Personal anecdote)
  • வரலாற்று நிகழ்வு. (Historical event)
  • சிந்தனையைத் தூண்டும் சவால்கள் (Thought-provoking dilemma)
  • நிஜ உலக உதாரணம் (Real-world example)
  • குறுகிய வீடியோ கிளிப் (Short video clip)
  • நடைமுறைப் பிரயோகம் (Practical application)
  • ஆய்வு கேள்விகள் (Probing question)

நாம் பாடத்தை அறிமுகத்தைத் திட்டமிடும் போது பின்வரும் வினாக்களை கருத்திற் கொள்ள வேண்டும்.

  • மாணவர்களுக்கு பாடவிடயத்தை பற்றி ஏதாவது தெரியுமா அல்லது அதைப் பற்றி ஏதேனும் முன்முடிவுகள் உள்ளதா என்பதை நான் எப்படிச் சரிபார்ப்பது?
  • இந்த பாடவிடயத்தை பற்றி மாணவர்கள் கொண்டிருக்கும் சில பொதுவான கருத்துக்கள் அல்லது தவறான கருத்துக்கள் என்னென்ன?
  • பாடவிடயத்தை அறிமுகப்படுத்த நான் என்ன செய்வேன்?

 

  1. சிறப்பான கற்றல் நடவடிக்கைகளை கட்டியெழுப்புவோம்

இதுவே பாடத்தின் பிரதான பகுதி. அதிகமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்,  வெவ்வேறு கற்றல் பாணிகளை ஈர்க்கும் வகையிலும்   பாடப்பொருளை விளக்குவதற்கு  பல்வேறு வழிகளில் நாம் தயாராக வேண்டும். உதாரணமாக

  • நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள்
  • ஒப்புமைகள்
  • விளக்கக் காட்சிகள்

எடுத்துக்காட்டுகள் மற்றும் செயல்பாடுகளைத் திட்டமிடும்போது, ஒவ்வொன்றிலும் எவ்வளவு நேரம் நேரத்தை செலவிடுகின்றோம்  என்பதை மதிப்பிட வேண்டும். நீடிக்கப்பட்ட  விளக்கங்கள் அல்லது கலந்துரையாடலுக்கான நேரத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஆனால் வெவ்வேறு பயிற்சிகள் அல்லது பிரச்சினைகளுக்கு  விரைவாகச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். மாணவர்கள் பாடத்தை எந்தளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை  சோதிக்கும் உத்திகளை அடையாளம் காண வேண்டும். நாம் பயன்படுத்தும் கற்றல் நடவடிக்கைகளைத் திட்டமிட பின்வரும் வினாக்கள் உதவும்.

  • பாடவிடயத்தை தெளிவுபடுத்த நான் என்ன செய்ய வேண்டும்?
  • பாடவிடயத்தை வேறுவிதமாக விளக்க நான் என்ன செய்ய வேண்டும்?
  • பாடவிடயத்தில் மாணவர்களை நான் எவ்வாறு ஈடுபடுத்துவது?
  • மாணவர்கள் பாடவிடயத்தை புரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய பாட விடயத்தோடு தொடர்புடைய நிஜ வாழ்க்கை எடுத்துக்காட்டுகள் ஒப்புமைகள் அல்லது சூழ்நிலைகள் யாவை?
  • மாணவர்கள் பாடவிடயத்தை நன்கு புரிந்துகொள்ள என்ன செய்யலாம்?

 

  1. மாணவர்களின் புரிதலை சரிபார்க்க திட்டமிடுவோம்.

பல்வேறு முறைகளில் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் பாட விடயத்தை  விளக்கிய நாம்   இக்கட்டத்தில் மாணவர்களின் புரிதலை சரிபார்க்க வேண்டும். மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாம்  எப்படி அறிவது? இதற்காக மாணவர்களிடம் நாம்  கேட்கக்கூடிய சிறப்புக்  கேள்விகளைப் பற்றி சிந்திக்கவேண்டும். அவர்கள் புரிந்து கொள்வதை சரிபார்த்து, அவற்றை எழுத வேண்டும். பின்னர் அவற்றைப் பொழிப்புச் செய்ய வேண்டும்.  எனவே நாம் வெவ்வேறு வழிகளில் வினாக்களைக்  கேட்கத் தயாராக இருக்க வேண்டும். நமது  கேள்விகள் உருவாக்கும் பதில்களைக் கணிக்க முயற்சிக்க வேண்டும்.  மாணவர்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டுமா?  அல்லது எழுத்து மூலமாகவோ பதிலளிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். நம்மை  நாமே  கேட்டுக்கொள்ளக்கூடிய சில வழிகாட்டும் கேள்விகள் இதோ

  • மாணவர்களின் புரிதலைச் சரிபார்க்க என்ன கேள்விகளைக் கேட்பேன்?
  • மாணவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
  • எனது கற்றல் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சரிபார்க்க என்ன செயற்பாடுகளில் நான் மாணவர்களை ஈடுபடுத்தலாம்.

மாணவர்களிடமிருந்து வினாக்களை எதிர்பார்ப்பது நேர முகாமைத்துவத்திற்கு  உதவும் ஒரு முக்கியமான உத்தி ஆகும். நாம்  பாடத்தைத் திட்டமிடும் போது, ​​எந்த வகையான வினாக்கள்  கலந்துரையாடலுக்கு  பயனுள்ளதாக இருக்கும் மற்றும் எந்த வகையான வினாக்கள்  வகுப்பை தன் பக்கம் திருப்பக்கூடும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உள்ளடக்கத்தை உள்ளடக்குவதற்கும் (எமது  கற்றல் நோக்கங்களை நிறைவேற்றுவது), மற்றும் மாணவர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்வதற்கும் இடையே உள்ள சமநிலையைப் பற்றி சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.

  1. சாராம்சத்தையும் முன்னோட்டத்தையும் விருத்தி செய்து கொள்வோம்.

நாம் பாடத்தின் முக்கிய குறிப்புக்களைச் சுருக்கமாகக் கூறி வகுப்பிலுள்ள முக்கிய விடயங்களை ஆராய வேண்டும். இதை நாம் பல வழிகளில் மேற்கொள்ளலாம். உதாரணமாக ” இன்று நாம் கற்ற விடயங்கள் ” … என தொடங்கி முக்கிய விடயங்களை நாமே கூறலாம். அவற்றைச் சுருக்கமாகக் கூற நாம் ஒரு மாணவரின் உதவியை நாடலாம். அல்லது அனைத்து மாணவர்களையும் சுருக்கமான எழுதச் சொல்லலாம். அதாவது அனைத்து மாணவர்களும் பாடத்தின் முக்கிய புள்ளிகள் என்று அவர்கள் கருதுவதை ஒரு தாளில் எழுதுமாறு நீங்கள் கேட்கலாம். பாடத்தைப் பற்றிய மாணவர்களின் புரிதலை அளவடுவதற்கு அவர்களின் பதில்களை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். பின்னர் தெளிவற்ற விடயங்களை விளக்கலாம். இவ்வாறு முக்கியக் குறிப்புகளைச் சுருக்கமாகச் சொல்வது மட்டுமல்ல,  இந்த பாடமானது, வரவிருக்கும் பாடவிடயத்துடன்  எவ்வாறு தொடர்புபடுகின்றது என்பது பற்றியும்  முன்னோட்டமிட வேண்டும். இந்த முன்னோட்டமானது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, பல்வேறு யோசனைகளை ஒரு பெரிய சூழலில் இணைக்க உதவும்.

  1. ஒரு யதார்த்தமான காலவரிசையை உருவாக்குவோம்.

நேரம் முடிந்து போவது எவ்வளவு எளிது என்பதும் அதற்குள்  நாம்  திட்டமிட்டிருந்த அனைத்து கருப்பொருட்களையும் உள்ளடக்க முடியாது என்பதும் கல்வியியலாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.  எனவே நீண்ட  கற்றல் குறிக்கோள்களின் பட்டியல் நம்பத்தகாதது. எனவே நாம் கற்றல் குறிக்கோள்களை  இரண்டு அல்லது மூன்றாக அல்லது மாணவர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் தேர்ச்சிகளுக்கு ஏற்றவாறு வரையறுத்துக் கொள்வது சிறப்பானது. (அறிதலாட்சி, மனவெழுச்சியாட்சி, உளவியக்கவாட்சி) மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டு பாடநேரத்தில் நமது செயற்பாட்டுத் திட்டத்தை  அடிக்கடி சரிசெய்ய வேண்டும் என்பதை கல்வியியலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். எமது முன்னுரிமை பெற்ற கற்றல் குறிக்கோள்கள் அந்த இடத்திலேயே முடிவுகளை எடுக்கவும், தேவைக்கேற்ப எமது செயற்பாட்டுத் திட்டத்தை சரிசெய்யவும் உதவும். கூடுதல் எடுத்துக்காட்டுகள் அல்லது மாற்று செயல்பாடுகளை வைத்திருப்பது உங்களை நெகிழ்வாக இருக்க அனுமதிக்கிறது. ஒரு யதார்த்தமான அட்டவணை உங்கள் நெகிழ்வுத்தன்மையையும் குறிப்பிட்ட வகுப்பறை சூழல்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. இங்கே சில உத்திகள் உள்ளன.

  • ஒவ்வொரு நடவடிக்கையும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை மதிப்பிட வேண்டும்.
  • பின்னர் ஒவ்வொன்றிற்கும் கூடுதல் நேரத்தை திட்டமிட வேண்டும். .
  • நாம் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • மீதமுள்ள நேரத்தில் வினாக்களுக்கு பதிலளிக்கவும், முக்கிய விடயங்களைச் வகுப்பின் முடிவில் சாராம்சப்படுத்த சில நிமிடங்களைத் திட்டமிடவேண்டும்.
  • இன்னும் நேரம் இருந்தால், மேலதிக செயல்பாடு அல்லது கலந்துரையாடல் வினாக்களைத்  திட்டமிட வேண்டும்.
  • மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எமது செயற்பாட்டுத் திட்டத்தை மாற்றியமைக்க தயாராக இருக்க வேண்டும்.
  • எமது அசல் திட்டத்துடன் ஒட்டிக்கொள்வதை விட அதிக உற்பத்தித் திறன் கொண்டதாகத் தோன்றும் செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

7. செயற்பாட்டுத் திட்டத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல்

இந்த பாடவிடயத்தினூடாக வகுப்பில் அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்பதை நமது மாணவர்களுக்குத் தெரியப்படுத்துவது, அவர்களை மேலும் ஈடுபாட்டுடனும் உரிய பாதையில் வைத்திருக்கவும் உதவும். கரும்பலகையில்  ஒரு சுருக்கமான நிகழ்ச்சி நிரலை எழுதுவதன் மூலமோ அல்லது குறித்த பாடவேளையில் மாணவர்கள் வகுப்பில் என்ன கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுவதன் மூலமோ எமது பாடத் திட்டத்தைப் பகிரலாம். வகுப்பு நேரத்தின் அர்த்தமுள்ள ஒழுங்கமைப்பை முன்வைப்பதானதுஇ மாணவர்களுக்கு நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல்   எமது முன்வைப்பை பின்பற்றவும் மற்றும் வகுப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் புரிந்துகொள்ளவும் உதவும். தெளிவாகத் தெரியும் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பது உங்களுக்கும் மாணவர்களுக்கும் உரிய பாதையில் இருக்க உதவும்.

8. செயற்பாட்டுத்திட்டம் பற்றிய பிரதிபலிப்பினை மேற்கொள்ளல்.

பல வெளிப்புற சூழ்நிலைகள் காரணமாக நாம் எதிர்பார்த்தபடி செயற்பாட்டுத்திட்டம்  செயல்படாமல் போகலாம். சோர்வடைய வேண்டாம் – இது மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கூட நடக்கும்! ஒவ்வொரு வகுப்பிற்குப்  பிறகும் சில நிமிடங்கள் எடுத்து பிரதிபலிப்பை மேற்கொள்ள வேண்டும்.  எது நன்றாக வேலை செய்தது, வித்தியாசமாக செய்திருக்கக் கூடிய விடயங்கள் எவை? அவற்றை எவ்வாறு செய்யலாம்? வகுப்பறை நேரமுகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகளின் வெற்றியில் அல்லது குறைவான வெற்றியில் வகுப்பறை ஒழுங்கமைப்பு எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது  என்பதை அடையாளம் காணுதல் என்பன வகுப்பறையின் நிச்சயமற்ற தன்மைகளை எளிதில் சரிசெய்ய உதவும்.

வகுப்பு நேரத்தை திட்டமிடுதல் மற்றும் முகாமை செய்தல் பற்றிய மேலதிக கருத்துக்களுக்கு நாம்   பின்வரும் ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்:

  • மாணவர்களின் பின்னூட்டல்.
  • சகஆசிரியர்களின் அவதானிப்பு.
  • நமது கற்பித்தலின் வீடியோ டேப்பைப் பார்ப்பது
  • பணியாளருடனான ஆலோசனை.

முடிவுரை

வினைத்திறனான ஒரு செயற்பாட்டுத் திட்டம் என்பது சாத்தியமான ஒவ்வொரு வகுப்பறை சூழ்நிலையையும் விவரிக்கும் ஒரு முழுமையான ஆவணமாக இருக்க வேண்டியதில்லை. அது ஒவ்வொரு மாணவரின் துலங்கலையோ  அல்லது கேள்வியையோ  எதிர்பார்க்க வேண்டியதில்லை. மாறாக, நமது கற்பித்தல் இலக்குகள், கற்றல் குறிக்கோள்கள் மற்றும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றின் பொதுவான விளக்கத்தை அது நமக்கு  வழங்க வேண்டும். நாம்  என்ன செய்ய விரும்புகிறோம், எப்படிச் செய்ய விரும்புகிறோம்  என்பதற்கான நினைவூட்டலாக அது இருக்க வேண்டும். வினைத்திறனான பாடம் என்பது எல்லாம் திட்டமிட்டபடி நடப்பது அல்ல ஆனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதாகும்.

Additional Resources

Barroso, K., & Pon, S. (2005). Effective lesson planning, A facilitator’s guide. California.

Adult Literacy Professional Development Project. American Institutes for Research, Sacramento, CA.

Heinich, R., Molenda, M., Russell, J., & Smaldino, S. (2001).

Instructional media and technologies for learning. Engle Cliffs (7th edition), NJ: Prentice Hall.

Hunter, Madeline. (1982). Mastery teaching. El Segundo, CA: TIP Publications.

Wiggins, G., & McTighe, J. (1998). Understanding by design. Association for Supervision and Curriculum Development, Alexandria, VA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page

×